கனடா - பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மற்றொரு முன்னாள் பழங்குடிச் சிறுவர் குடியிருப்புப் பள்ளி வளாகத்தில் முன்னர் அடையாளப்படுத்தப்படாத மேலுமொரு புதைகுழியில் இருந்து 182 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த எச்சங்கள் குடியிருப்பு பள்ளியின் முன்னாள் மாணவர்களுடையதா? என விரைவில் உறுதிப்படுத்தப்படும் என மாகாண பழங்குடியின தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கம்லூப்ஸ் நகருக்கு அருகிலுள்ள முன்னாள் குடியிருப்புப் பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடி சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
தொடர்ந்து சஸ்காட்செவன் மாகாண தலைநகர் ரெஜினாவிலிருந்து 140 கிலோ மீற்றா் தொலைவில் உள்ள மேரிவல் இந்தியன் குடியிருப்பு பள்ளியில் கடந்த மாத இறுதியில் 751 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டன.
இந்நிலையிலேயே பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மற்றொரு முன்னாள் பழங்குடிச் சிறுவர் குடியிருப்புப் பள்ளியில் இருந்து மேலும் 182 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கனடாவில் தொடர்ச்சியாக முன்னாள் பழங்குடி குடியிருப்பு பள்ளி புதைகுழிகளில் மனித எச்சங்கள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் இது பெரும் பரபரப்பையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைகள் தொடர்ந்தால் மேலும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக கனடா பழங்குடி இன தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
19 ஆம் நூற்றாண்டு முதல் 1970 கள் வரை கனேடிய பழங்குடியின சிறுவர்களை இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக குடியிருப்பு பள்ளிகள் இருந்தன. இவற்றில் சுமார் 150,000 க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் இணைய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
அத்துடன், அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டி கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களுடைய சொந்த மொழிகளைப் பேச குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை. இப்பள்ளிகளில் பல பழங்குடியின குழந்தைகள் உடல், உள ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர். இந்தப் பள்ளிக் கட்டமைப்புக்களில் 6,000 குழந்தைகள் வரை இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கட்டமைக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் குறித்து கனேடிய அரசாங்கம் 2008 இல் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரியது. இந்தப் பள்ளிக் கட்டமைப்புக்களில் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட துன்புறுத்தல்கள் பரவலாக இருந்ததையும் கனேடிய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
பல மாணவர்கள் தங்கள் சொந்த மொழிகளைப் பேசியதற்காக தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டனர். பெற்றோர் மற்றும் தங்கள் கலாசார அடையாளங்களில் இருந்து அவர்கள் விலக்கிவைக்கப்பட்டனர். இதுவொரு கலாசார இனப்படுகொலையாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.