நெருப்பெடுக்கிறது இயற்கை! கருகுகின்றது கனடாக் கிராமம்!! (படங்கள்)

  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
காலநிலைப் பாதிப்புகள் மனித குலத்தை எதிர்காலத்தில்தான் தாக்கும் என்றிருந்த நம்பிக்கை தொலைந்து விட்டது. இயற்கை தன்னைச் சீண்டுகின்ற மனிதனை நிகழ்காலத்திலேயே பல வடிவங்களில் திருப்பித் தாக்கத் தொடங்கி விட்டது.

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து தரைமட்டமாகிமையும் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வான்கூவர் அருகே ஒரு கிராமம் நெருப்பு வெக்கையில் வெந்து கொண்டிருப்பதும் பூமி வெப்பமடைதலின் உடனடி விளைவுகள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

வான்கூவரில்(Vancouver) இருந்து 260 கிலோ மீற்றர்கள் வடகிழக்கே அமைந்துள்ள சிறிய கிராமம் லிட்டன் (Lytton). அங்கு அடுத்தடுத்து சிலநாட்களில் வெப்பநிலை உயர்ந்து உலக சாதனை அளவை எட்டியுள்ளது.

கடந்த செவ்வாயன்று அங்கு 49.6C (121.3F) வெப்பநிலை பதிவானது என்ற செய்தி வெளியான போது முழு உலகமும் லிட்டனை நோக்கித் திரும்பியது.

சமீபகால வரலாற்றில் கனடாவில் மட்டுமன்றி உலக அளவிலும் மக்கள் வாழ்விடப் பகுதி ஒன்றில் பதிவாகிய அதி உச்ச வெப்ப நிலை இதுவே என்று கூறப்படுகிறது.
 
லிட்டன் பகுதியில் கடந்த சில தினங்களில் பதிவான மரணங்கள் 185 என்ற வழமையான கணக்கில் இருந்து 486 ஆக அதிகரித்துள்ளன.காற்றோட்ட வசதி இல்லாத வீடுகளில் படுக்கைக்குச் சென்ற பல முதியோர்கள் மறுநாள் எழுந்திருக்கவில்லை. 

நெருப்பு மூழும் அளவுக்கு வெப்பம் தகிப்பதால் நகரை விட்டு வெளியேறுமாறு மக்கள் கேட்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளிலும் தீ பரவி யுள்ளது. "முழுநகரமுமே நெருப்பில் உள்ளது" ("The whole town is on fire.") என்று
லிட்டன் நகர மேயர் ஜான் போல்டர்மேன் (Jan Polderman) அதிர்ச்சியுடன் விவரித்திருக்கிறார்.

உச்ச வெப்பம் தீயாக மூண்டு லிட்டன் கிராமத்தின் 90 வீதமான பகுதிகளைப்
பொசுக்கிய விட்டதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அமெரிக்காவிலும் கனடாவின் பல பகுதிகளிலும் திடீரென வெப்பம் உயர்ந்துவந்த போதிலும் பிரிட்டிஷ் கொலம்பியாவையே அது மோசமாகத் தாக்கி உள்ளது. 

வசந்தத்துக்கும் கோடைக்கும் இடையே இதமான பருவ நிலையை அனுபவிக்க வேண்டிய கனடா மக்கள் உறங்க முடியாத இரவுகளைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா(British Columbia) மாகாணத்தின் பெரிய நகரமான வான்
கூவரில் பொது மக்கள் தங்குவதற்காக 25 குளிரூட்டப்பட்ட பாரிய நிலையங்கள் (air-conditioned cooling centres) திறக்கப்பட்டிருக்கின்றன.

வெப்பக் குவிமாடங்கள் (heat domes)
 
சமீப காலங்களில் உருவாகிவருகின்ற இதுபோன்ற புதிய வடிவங்களிலான
இயற்கை அனர்த்தத்தை அறிவியலாளர்கள் "heat domes" என்று பெயர் குறிப்பிட்டு அழைக்கின்றனர். பூமியின் வெப்ப அதிகரிப்பு தரைப் பகுதிகளை உலர்த்தி வருகிறது. 

வரண்ட தரை வெப்ப நிலையைப் பெருக்குகின்றது. தரையிலும் சமுத்திரத்திலும் இவ்வாறு வெப்பம் பெருகி அதனால் உருவாகின்ற வெம்மையான காற்றலை வானில் ஒரு தொப்பி போன்ற அமைப்பில் "வெப்பக் குவி மாடத்தை" (heat dome) தோற்றுவிக்கின்றது.

அமெரிக்கா - கனடாவை உள்ளடக்கிய வடமேற்கு பசுபிக்கில் (Pacific Northwest)
தற்சமயம் உருவாகியுள்ள இத்தகைய ஒரு" வெப்பக் குவிமாடமே" பல மில்லியன் மக்களைப் பாதித்துள்ள அனல் அதிகரிப்புக்குக் காரணம் ஆகும்-என்றுவானிலை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்கா கண்டத்தில் மட்டுமன்றி ஆசியா, ஐரோப்பாப் பகுதிகளிலும் "வெப்பக் குவிமாடம்" தோன்றலாம். இது ஒரு புதிய வடிவ அனர்த்தம் என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

பூமி வெப்பம் அடைதலைத் தடுக்கின்ற உலக நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் தானும் நகர்ந்தபாடில்லை. ஆனால் அதன் விளைவுகள் பெரும் அழிவுகளாக மனிதனை மிக அருகில் நெருங்கி விட்டன.

அமெரிக்காவின் புளோரிடாவில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்த பெரும் அனர்த்தத்துக்கான மூல காரணத்தை அறிவதில் தொழில்நுட்ப நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் மிக அரிதாகவே நடக்கின்றன. பருவ நிலை மாற்றம், கடல்நீர் மட்டம் உயர்தல், பலமான சூறாவளிகள் போன்ற இயற்கைக் காரணிகளும் கட்டடம் தகர்ந்ததற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்ற கோணத்திலும் அறிவிய லாளர்கள் சில சந்தேகங்களை முன்வைக்கின்றனர். 

மியாமி கரையோர த்தில் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தரையின் மேலும் கீழும் அடர்த்தியான உப்பு நீர் அதிகரிப்பது கட்டடத்தின் அடித்தளத்தையும் உள் ஆதரவுக் கட்டமைப்புகளையும் பலவீனப்படுத்துவதில் குறிப்பிடத்தக்களவு பங்கு வகித்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள்
நம்புகின்றனர்.

அது உண்மையானால் கடல் நீர்மட்டம் அதிகரிப்பது உலகெங்கும் கடற்கரையோர நகரங்களின் அத்தி வாரங்களை ஆட்டங்காணச் செய்யலாம்.

Previous Post Next Post