வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் திடீர் என தடுமாறி வீதியோரம் வீழ்ந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உள்ளது என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சுதுமலை மற்றும் உரும்பிராயை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடையவரே இவ்வாறு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் போதனா வைத்தியசாலையில் உறவினர் ஒருவரை பார்வையிட்டு நேற்று மதியம் 1.45 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் சிவலிங்கப் புளியடியச் சந்தியில் பயணித்த போது, அவர் திடீரென வீதியில் மோட்டார் சைக்கிளில் சரிந்து வீதியோரத்தில் வீழ்ந்துள்ளார். அவலக் குரல் எழுப்பிய அவரை அந்தப் பகுதியைச் சேர்ந்தோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.
அவருக்கு உடனடியாக முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை 1.25 மணியளவில் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
சடலம் சுகாதார விதிமுறைகளின் கீழ் யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் மயானத்தில் மின்தகனம் செய்யப்படவுள்ள நிலையில் அவரது உறவினர்கள் ஐவர் அழைக்கப்பட்டுள்ளனர்.