யாழில் இளைஞர்களை தாக்கி, சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவாந்துறை பகுதியில் புறா வளர்த்த இரண்டு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியது. அந்நிலையில் தாக்குதலை நடாத்திய இளைஞர்கள், தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களிடம் சமரசம் பேச முற்பட்ட போது , பெண்கள் குழுவொன்று சமரசம் பேச வந்த இளைஞர்கள் நான்கு பேரை தாக்கி, அவர்களின் முகங்களில் மிளகாய் தடவி சித்திரவதை புரிந்து அதனை காணொளியாக பதிவேற்றி , அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
பெண்களின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞர்களில் ஒருவர் கடந்த 26 ஆம் திகதி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
இந்நிலையில் இளைஞர் குழுவை தாக்கிய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பிரதான சந்தேக நபரான பெண் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை கைது செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று பெண்களையும் ஒரு ஆணையும் கைது செய்துள்ளனர்.
அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில பெண்கள் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.