இரண்டு அளவு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் சுய தனிமை விதிகளிலிருந்து விலக்கு பெறும் துறைகளின் பட்டியலை பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் பிங்டெமிக் (Pingdemic) தொடர்பான கவலைகளுக்கு மத்தியில் மிகக் குறுகிய முக்கிய தொழிலாளர்கள் குழுவிற்கு விலக்கு அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலின் படி, சுய தனிமை விலக்குக்கான ‘நாளாந்த அடிப்படையில்’ அதிகாரிகள் ‘அளவுகோல்களைப் பூர்த்தி செய்யக்கூடிய பாத்திரங்களையும் பணியிடங்களையும் ஏற்றுக்கொள்வார்கள்’.
இது ஒரு துறையில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்குமாக விலக்கு அல்ல, இது பெயரிடப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்களின் முதலாளி சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறையிலிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றால் மட்டுமே பொருந்தும்.
கோவிட் தொற்றுடைய நபருடன் தொடர்பு கொண்ட பின்னர் பத்து நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும் கூட, நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்ற முடியும்.
எனினும், அவர்கள் கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பி.சி.ஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு டெல்டா கோவிட் மாறுபாடு பரவத் தொடங்கியதிலிருந்து மில்லியன் கணக்கான மக்கள் சுய தனிமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பிங்டெமிக் அச்சுறுத்தல் காரணமாக பிரித்தானியாவில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தப்படுவதால் உணவு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தற்போது கோவிட் - 19 தடமறிதல் விதிகளின் கீழ் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.