குமாரதாஸன். பாரிஸ். பிரான்ஸில் உணவகம் போன்ற பொது இடங்களில் வரவிருக்கின்ற கட்டாய சுகாதாரப் பாஸ் விதிகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களது உரிமையார்களுக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும் 45 ஆயிரம் ஈரோக்கள் அபராதமும் விதிக்கப்படலாம்.
கடந்த புதனன்று அதிபர் மக்ரோன் அறிவித்த சுகாதார விதிமுறைகளைச்
சட்டமாக்குவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள வரைவு ஒன்றில் அபராதம்
தொடர்பான இத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன என்று ஏஎப்பி செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றிய ஒருவர் பத்து நாட்கள் சுயதனிமையில் இருக்க வேண்டும் என்ற விதியையும் கட்டாயமாக்குவதற்கு அரசு விரும்புவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தடுப்பூசி ஏற்றுவதை படிப்படியாகக் கட்டாயமாக்குவதைப் போல ஒருவர் தனிமையில் இருக்க வேண்டியதையும் சட்டத்தின் மூலம் கட்டாயமாக்குவது வைரஸ் பரவலைக் குறைப்பதற்கு உதவும் என்று அரச உயர்மட்டம் கருதுகின்றது.
தொற்றுப் பரவல் உள்ள வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு தற்சமயம்
கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற நடைமுறை போன்ற பத்து நாள்கள் பொலீஸ் கண்காணிப்புடன் கூடிய மிக இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் கூடிய தனிமைப்படுத்தலை உள்நாட்டில் தொற்று உறுதியானவர்களுக்கும் நடை
முறைப்படுத்துவதற்கு அரசு விரும்புகிறது.
தற்போது போன்று வைரஸ் தொற்று உறுதியான ஒருவரை அவராகவே வசிப்பிடத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட விடுகின்ற விதிகளை மாற்றி அறிவிக்கப்படுகின்ற இடம் ஒன்றில்-மிக இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் - தனிமைப்படுத்துகின்ற வகையில் புதியவிதிகள் அமையும் என்று கூறப் படுகிறது.
வைரஸ் தொற்று உறுதியான ஒருவர் அடுத்தவருக்குப் பரப்பாத விதமாகத் தனிமைப்படுத்தலில் முழுமையாக இருப்பதை உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்குப் புதிய நடைமுறை உதவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அரசுக் கவுன்சிலின் (Conseil d’État) அனுமதி பெறப்பட்ட பின்னர் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்ட வரைவில் இந்தத் தனிமைப்படுத்தல் விதி முறைகளும் உள்ளடக்கப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.