- குமாரதாஸன், பாரிஸ்.
பல நாடுகளிலும் டெல்ரா போன்ற வைரஸ் திரிபுகளின் தொற்று அதிகரித்துவருவதால் தடுப்பூசி ஏற்றுவதை விரைவுபடுத்தவும் அதனைக் கட்டாயமாக்கவும் வேகமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசரம் அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றுவதை ஒருவரது விருப்பத் தெரிவாக விட்டுவிடவே பல நாடுகளும் விரும்புகின்ற போதிலும் பரந்துபட்ட அளவில் அதனை விரைவு படுத்துவதாயின் சில அழுத்தங்களை மக்கள் மீது திணிக்கவேண்டிய கட்டாயமும் எழுகிறது. அவ்வாறு செய்ய முற்படும் சந்தர்ப்பத்தில் அதற்கு எதிர்ப்புக் கிளம்பக்கூடிய நிலையும் உள்ளது.
பிரான்ஸில் இவ்வாறு தடுப்பூசி கட்டாயமாக்கப்படுதை அறிவிக்கின்ற அதிகாரம் யாரிடம் உள்ளது? அவ்வாறு அறிவிப்பதை பிரஜை ஒருவர் சட்டத்தின்துணையோடு எதிர்க்க முடியுமா? தடுப்பூசியை மக்களது விருப்பத்துக்கு மாறாகத் திணிக்க விரும்பவில்லை என்றே பிரான்ஸின் அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
தடுப்பூசி மக்களது சொந்த விருப்பத் தெரிவாகவே இன்னமும் விடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் சில தினங்களுக்கு முன்னரும் அரசின் இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி இருந் தார்.
ஆனாலும் நோயாளர் பராமரிப்பு போன்ற மருத்துவப் பணியினருக்கு தடுப்பூசியைக் கட்டாயமாக்குகின்ற முயற்சியை அரசு ஆரம்பித்துள்ளது.
பிரான்ஸின் பொதுச் சுகாதாரச் சட்டத்தின் L3111-1 சரத்தின் படி தடுப்பூசி ஒன்றைக் கட்டாய பயன்பாட்டுக்கு உத்தரவிடும் அதிகாரம் சுகாதார அமைச்சுக்கே உள்ளது.
நாட்டின் அதிஉயர் சுகாதார அதிகார சபையின் (Haute Autorité de Santé) பரிந்துரையின்படி தடுப்பூசி தொடர்பான கொள்கைகளை சுகாதார அமைச்சர் வகுக்க முடியும்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு முன்னரே பல தடுப்பூசிகள் கட்டாயம் ஏற்றப்பட வேண்டியவை என்ற பட்டியலில் உள்ளன.
பிரான்ஸில் இரண்டு வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு பதினொரு வகையான தடுப்பூசிகள் கட்டாயமானவை. அத்துடன் ஆபத்தான நோயாளிகளைக் கவனிக்கின்ற மருத்துவப் பணியாளர்களுக்கும் தடுப்பூசிகள் உள்ளன. சில சுகாதாரச் சட்டங்கள் இதனை வரையறை செய்கின்றன.
கட்டாயமாக ஏற்றிக் கொள்ள வேண்டிய தடுப்பூசிகளைத் தவிர்க்கின்ற மருத்துவப் பணியாளர்கள் தண்டனைகளைச் சந்திப்பதற்கும் இடம் உண்டு.
ஏற்பு ஊசி, தட்டம்மை, போலியோ, ரூபெல்லா உட்பட மொத்தம் பதினொரு
தடுப்பூசிகள் (diphtheria, tetanus and polio, whooping cough, measles, mumps, rubella, hepatitis B, meningococcus C, pneumococcus and Haemophilus influenza) ஏற்கனவே கட்டாயமானவையாக நடைமுறையில் உள்ளன.
2018 ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் இந்தப் 11 தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொள்ளாத இரண்டு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளை அரச மற்றும் தனியார் பாலர் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளமுடியாது.
சில தொழில் துறையினரும் கட்டாயமாக சில தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள
வேண்டிய கடப்பாடுடையோர் என்ற வகைக்குள் வரமுடியும். அத்தகைய
தொழில் துறைகள் ஆண்டு தோறும் தொற்று நோய்களைப் பொறுத்துப் புதுப்
பிக்கப்படுகின்றன.
அதேபோன்று தொற்றுக்கு உள்ளாகக் கூடிய சூழலில் தனியார் அல்லது அரச துறைகளின் பணியாற்றும் ஒருவர் அல்லது முதியவர்களை மூதாளர் இல்லங்களிலோ அல்லது அவர்களது வீடுகளிலேயோ வைத்துப் பராமரிப்பதை முறைப்படியான தொழிலாகக் கொண்டவர்கள் சில தொற்று நோய்களுக்கு எதிராகத் தங்களை நோய் எதிர்ப்புள்ளவர்களாக்கிக் கொள்வது கட்டாயம் ஆகும்.
அத்தகையோர் hepatitis B, diphtheria, tetanus, polio, influenza போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வது கட்டாயம் என்பதை பிரான்ஸின் பொதுச் சுகாதாரச் சட்டத் தின் L3111-4 பிரிவு தெளிவுபடுத்துகிறது.
இந்த அடிப்படையில் நோயாளர்களையும் மூதாளர்களையும் பராமரிக்கின்ற பணிகளில் ஈடுபடுகின்ற மருத்துவப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பதும் தார்மீகரீதியான கட்டாயம் ஆகும்.
ஆனால் அத்தகைய பணியாளர்களில் அரைவாசிப் பங்கினரே இதுவரை தமது
முதலாவது தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளனர்.
முதலாவது தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளனர்.
மருத்துவப் பராமரிப்பாளர்களில் (le personnel soignant) குறைந்தது 80 வீதமானவர்கள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்பாகத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவிடத்து அவர்களுக்கு அதனைக் கட்டாயமாக்குகின்றசட்ட நடவடிக்கையை அரசு எடுக்கவுள்ளது.