பிரிட்டனில் நேற்று 32,552 புதிய தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் நாட்டில் பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 50 இலட்சத்தைக் கடந்தது.
நேற்று வரையான தரவுகளின் பிரகாரம் பிரிட்டனில் மொத்தம் 50 இலட்சத்து 22 ஆயிரத்து 893 ஆக தொற்று நோயாளர்கள் உத்தியோகபூா்வமாக உறுதி செய்யப்பட்டனர்.
அத்துடன், நேற்று மேலும் 35 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் நாட்டில் கொரோனாவால் பலியானோர் தொகை 128,336 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, பிரிட்டனில் இதுவரை 45.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முதல் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 34.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முழுமையாக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகின்ற போதும் பயணக் கட்டுப்பாடுகளை பிரிட்டன் தளர்த்தி வருகிறது. முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்கள் பிரிட்டன் வரும்போது தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிவப்புப் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வருவோர் தடுப்பூசி நிலை குறித்து கருத்தில் கொள்ளப்படாமல் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் கோவிட் 19 பெரும்பாலான கட்டுப்பாடுகள் 19 ஆம் திகதி முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு 12 ஆம் திகதி இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.