ஜேர்மனியின் வெள்ள அழிவுகளைப் பார்த்துச் சிரித்த அதிபர் வேட்பாளர்! (படங்கள்)


  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்
ஜேர்மனியில் வெள்ள அழிவுப்பகுதிகளுக்கு நேரில் சென்றிருந்த முக்கிய அரசுப் பிரமுகர் ஒருவர் சேதங்களைப் பார்வையிடும் சமயத்தில் நகைச்சுவை வெளிப்படப் பேசிச் சிரிக்கின்ற காட்சி ஊடகங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அங்கெலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (Christian Democrats-CDU) தலைவரும் செப்ரெம்பரில் நடைபெறவிருக்கின்ற அதிபர் தேர்தலில் அக்கட்சி
சார்பில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளருமாகிய அர்மின் லாசெற் (Armin Laschet) அவர்களே இவ்வாறு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அங்கெலா மெர்கலுக்குப் பிறகு நாட்டின் அடுத்த அதிபராகும் வாய்ப்பைக் கொண்டவரான அர்மின் லாசெற் வெள்ள அனர்த்தத்தால் பேரழிவுகளைச் சந்தித்த இரண்டு மாநிலங்களில் ஒன்றாகிய North Rhine-Westphalia (west) பிராந்தியத்தை நிர்வகிக்கின்ற முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டின் ஜனாதிபதியாகிய Frank-Walter Steinmeier அவர்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்த அர்மின் லாசெற், ஓரிடத்தில் ஜனாதிபதி செய்தியாளர்களுக்கு உரையாற்றிய வேளை பின்னால் நின்று தனது சக நண்பர்களுடன் சிரித்து நகைச்சுவையாக உரையாடிக் கொண்டிருந்த வீடியோ காட்சியே ஊடகங்களில் வெளியாகியது.

முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் மக்களது துன்பங்களுக்கு முன்னால் நின்று அவ்வாறு நடந்து கொண்டதை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் "பண்பற்றசெயல்" என்று விமர்சித்துள்ளன. அதிருப்தி அதிகரித்ததை அடுத்து
அர்மின் லாசெற், தனது ருவீற்றர் தளத்தில் மன்னிப்புக் கோரும் பதிவு ஒன்றை
வெளியிட நேர்ந்தது.

அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அவரது நடத்தை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் அவரது செல்வாக்கைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. 
  • அழிவுண்ட கிராமத்துக்கு அங்கெலா மெர்கல் வருகை
நியூயோர்கில் இருந்து திரும்பிய சான்சிலர் அங்கெலா மெர்கல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வெள்ள அழிவுப்பிரதேசங்களுக்கு நேரில் சென்று
பார்வையிட்டார். 

மேற்கு ஜேர்மனியில் அஹ்ர் நதி (Ahr River)பெருக்கெடுத்துத் துவம்சம் செய்த ஷுல்ட் (Schuld) என்னும் கிராமத்துக்குச் சென்றிருந்த மெர்கல், அங்கு அழிவுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவராகக் காணப்பட்டார்.

வீடுகளும் உடைமைகளும் அடித்துச் செல்லப்பட்டு பெரும் குப்பை மேடுகளாய்க் காட்சி தருகின்ற வீதிகளில் அவர் மீட்புப் பணியாளர்களையும்
கிராம மக்களையும் சந்தித்தார்.

"அதிர்ச்சியளிக்கின்ற இந்தக் காட்சி களை வர்ணிப்பதற்கு ஜேர்மனிய மொழியில் வார்த்தைகளே இல்லை என்று என்னால் கூறமுடியும்.."-இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தனது மன உணர்வை வெளிப்படுத்தினார்.

பூமி வெப்பமடைவதைத் தடுக்கும் பணிகளை மிக விரைவாகவும் பேய் மழை பாதித்த பல பகுதிகளும் போர்ப் பிரதேசங்கள் போன்று காட்சியளிக்கின்றன.

அழிவுகளால் மூடுண்டு கிடக்கின்ற பல நகரங்களில் வீதிகளைத் துப்புரவு செய்யும் பணிகளில் இராணுவ கவச வாகனங்கள் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளன.

மின்சாரம், தொலைத்தொடர்பு, எரிவாயு இணைப்புகளை மீள ஏற்படுத்துவதற்கு நாள்கள் பல செல்லும் என்பதால் பல கிராமங்கள் வெளித் தொடர்புகள் இன்றித் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஜேர்மனியின் அண்மைய வரலாற்றில் மிக மோசமானது எனக் கூறப்படுகின்ற வெள்ள அனர்த்தத்தில் இதுவரை 156 பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்களில் Rhineland- Palatinate state மாநிலத்தில் மட்டும் 110 பேர் இறந்துள்ளனர். 670 பேர் வரை காயமடைந்துள்ளனர். பல இடங்களிலும் காணாமற்போன சுமார் 300 பேர் தேடப் பட்டுவருகின்றனர்.

பெல்ஜியம் உட்பட ஜரோப்பாவில் மழை காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
Previous Post Next Post