பிரான்ஸை மிரட்டும் “டெல்ரா”! வேகமெடுக்கிறது நான்காவது அலை!! மீண்டும் கட்டுப்பாடுகள்?


  • குமாரதாஸன், பாரிஸ்.
பாரிஸ் உட்பட 11 பிராந்தியங்களில் 'டெல்ரா' வைரஸ் திரிபின் பரவல்
அதிகரித்துள்ளது. நாளாந்தத் தொற்றுக்களில் நாற்பது வீதமாக அது உயர்ந்துள்ளது. இதனால் நாட்டில் நான்காவது தொற்றலை வேகமாகத் தோன்றும் ஆபத்துக் காணப்படுகிறது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் இத்தகவல்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

புதிய வைரஸ் காரணமாக உருவாகி உள்ள நிலைவரத்தை ஆராய்வதற்காக சுகாதாரப் பாதுகாப்புச் சபையின் கூட்டம் அதிபர் மக்ரோன் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை எலிஸே மாளிகை யில் கூட்டப்படவுள்ளது என்றும் அவர் அறிவித்தார். 

எத்தகைய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் எதனையும் அரச பேச்சாளர் வெளியிடவில்லை. ஆனால் சுகாதாரப்
பணியாளர்களுக்குத் தடுப்பூசியைக் கட்டாயமாக்குதல் மற்றும் கோடை
விடுமுறைக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், அயல் நாடுகளுடனான எல்லைகளை இறுக்குதல் போன்ற விடயங்கள் கூட்டத்தில் ஆராயப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி நாட்டின் சுதந்திர தினத்துக்கு முன்னராக அதிபர் மக்ரோன் நாட்டு மக்களுக்கான உரை ஒன்றை வழங்கக் கூடும் என்று
எலிஸே மாளிகை வட்டாரங்களை ஆதாரம் காட்டி BFM தொலைக் காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

வேகமாகப் பரவுகின்ற டெல்ரா வைரஸ் தொற்றுக்கள் இவ்வாறு அதிகரித்துச்
சென்றால் ஜூலை - ஓகஸ்ட் மாதகாலப் பகுதியை உள்ளடக்கிய கோடை விடுமுறையைக் குழப்பக் கூடிய நான்காவது வைரஸ் அலை தோன்றக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கொரோனா வைரஸின் புதிய மரபு மாற்ற வடிவங்களான டெல்ரா, எப்சிலன் மற்றும் லாம்ப்டா வைரஸ் திரிபுகள் ஜரோப்பா எங்கும் பரவிவரும் நிலையில்
ஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற நாடுகளில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் மீளவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post