யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணே நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
“கர்ப்பிணிப் பெண் திருமணம் முடித்து ஒரு ஆண்டு. அவர் நேற்று திடீரென வாந்தியெடுத்து மயக்கமடைந்து நிலத்தில் சரிந்துள்ளார். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று வெளிநோயாளர் பிரிவிலேயே மருத்துவ அறிக்கையிடப்பட்டது. அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை பரிசோதனையில் தெரியவந்துள்ளது” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான இறப்பு விசாரணையை திடீர் இறப்பு விசாரணை நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்ய திடீர் இறப்பு விசாரணை அதிகாரி அறிக்கையிட்டார்.