வரும் செப்ரெம்பர் 6ஆம் திகதிக்கு பின்னர் நாடு மேலும் மூடப்படுமா? இல்லையா என்பது தற்போதைய நிலமை ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்படும் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சரவை இணைப் பேச்சாளர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது அல்லது முடிவுறுத்துவது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை.
நாடு நிதி ரீதியில் நெருக்கடியான காலக்கட்டத்தை கடந்துவரும் இந்த சந்தர்ப்பத்தில் நிதி ஓழுங்குவிதிகளை இறுக்கமாக கடைபிடிக்க வேண்டிய கடற்பாடு உள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அரச நிறுவனங்களில் கடுமையான நிதி ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
நடைமுறைப்படுத்த முடியாத யோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்த கூடாது. தேவையற்ற கொடுப்பனவுகளை நிறுத்தி கடுமையான நிதி கட்டுப்பாட்டை நாட்டில் முன்னெடுக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் செயற்படுவது குறித்த இறுதித் தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
அத்தியாவசியமற்ற ஆள்சேர்ப்பு நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். இதேபோன்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுததப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் அதிகாரிகளுக்கு எரிபொருளுக்கான கொடுப்பனவு வழங்கப்படுமாயின் அதுதொடர்பில் அமைச்சு மற்றும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன – என்றார்.
இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதாக மேலும் 498 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 42 வாகனங்களும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதற்காகவும், தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதற்காகவும் இதுவரை மொத்தம் 62 ஆயிரத்து 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.