செவ்வாய்க்கிழமை முதல் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை!


எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) ஆம் திகதி நள்ளிரவு முதல், வீடுகளிலும், மண்டபங்களிலும் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என கோவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அத்துடன், இன்று(15) நள்ளிரவு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் ஒன்றுகூட அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேநேரம், உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதமானோரை விடவும் அதிகமானோருக்கு ஒன்றுகூட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொது இடங்களில் நடமாடுவதை இயன்றளவு தவிர்க்குமாறும் அரசாங்கம் கோருவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post