வன்முறைக் கும்பலின் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
குருநகரைச் சேர்ந்த ஜெரன் (வயது -24) என்பவரே பரிதாபமாக உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையாக நேற்று மாலை 4 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை வேறு இரண்டு மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நால்வர் வழிமறித்து சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தினர்.
தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் குருதி வெள்ளத்தில் கிடந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களினால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூவரில் ஒருவரின் கால்கள் இரண்டும் கடுமையாக வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியது. அவரே உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிவானின் விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு பொலிஸாரும் முப்படையினரும் வீதிச் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபடும் வேளையில் வன்முறைக் கும்பல் இந்தத் தாக்குதலை முன்னெடுக்கப்பட்டது.
தொடர்புபட்ட செய்தி: