கனடாவில் ட்ரூடோவின் கட்சி வெற்றி: ஆனால் மீண்டும் சிறுபான்மை ஆட்சி!


  • குமாரதாஸன், பாரிஸ்.
கனடாவில் நடைபெற்று முடிந்த வாக்களிப்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி கூடிய ஆசனங்களைப் பெறும் நிலையில் உள்ளது. ஆனால் எதிர்பார்த்தது போன்று தனித்துப் பெரும்பான்மை இடங்களை அதனால் வெல்ல முடியாமற் போயிருக்கிறது.

கனெடிய ஊடகங்களின் மதிப்பீடுகளின் படி ட்ரூடோவின் கட்சி தேசிய அளவில் 155 இடங்களில் முன்னணியில் உள்ளது. 338 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு குறைந்தது 170 இடங்களை வெல்ல வேண்டும்.பழமைவாத எதிர்க்கட்சி (Conservatives)121 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.
 
முற்கொண்டு வெளியாகியுள்ள முடிவுகளின் படி,லிபரல் கட்சி மீண்டும் மற்றொரு கட்சியுடன் கூட்டணியாக சிறுபான்மை அரசாங்கத்தை நிறுவுகின்ற நிலையே காணப்படுகிறது.இதனால் நாட்டில் மீண்டும் ஸ்திரமற்ற ஆட்சியே நீடிக்கவுள்ளது.

லிபரல் மற்றும் பழமைவாதிகள் இடையே கடும் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் இரண்டு கட்சிகளது தலைவர்களும் தத்தமது தொகுதிகளில் வெற்றியீட்டியிருக்கின்றனர். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கியூபெக்கில்(Quebec) உள்ள தனது Papineau தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

அதே போன்று எதிர்க்கட்சித் தலைவர் எரின் ஓ ரூல் (Erin O'Toole) ஒன்ராறியோவில் Durham என்ற பகுதியில் தனது ஆசனத்தைத் தக்கவைத்துள்ளார். பழமைவாதிகள் பின்தங்கி இருப்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சிறுபான்மை அரசாக உள்ள தனது கட்சிக்குத் தனித்து அறுதிப் பெரும்பான்மையைப்பெறும் நோக்குடன் உரிய காலத்துக்கு இரண்டு ஆண்டுகள் முன்னராகப் பொதுத் தேர்தலை அறிவித்திருந்தார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

ஆனால் அவர் எதிர்பார்த்த பெரும்பான்மையைப் பெற முடியாமற் போயிருப்பது கட்சிக்குள் அவருக்கு அழுத்தங்களை ஏற்படுத்தலாம். இந்தத் தேர்தலில் முக்கிய இடதுசாரிக் கட்சியாகிய ஜக்மீத் சிங்(Jagmeet Singh) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி கடந்த தடையை விடக் குறைந்தது மூன்று மேலதிக ஆசனங்களுடன் 27 இடங்களைக் கைப்பற்றியிருப்பதைப் பூர்வாங்க முடிவுகள் காட்டுகின்றன.

வாக்களிப்பு நிலையங்களில் வைரஸ் சுகாதார விதி முறைகள் காரணமாக நீண்ட வரிசைகளும் அதனால் தாமதங்களும் ஏற்பட்டன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
Previous Post Next Post