- பாரிஸிலிருந்து குமாரதாஸன்
எனினும் இன்று அதிகாலை வரை வெளியாகிய உத்தியோகபூர்வ முடிவுகளின் படி 63 வயதான ஓலாஃப் ஸ்சோல்ஸ்(Olaf Scholz) தலைமையிலான மைய இடது சாரி சமூக ஜனநாயகக் கட்சி(centre-left Social Democrats -SPD) மயிரிழையில் வெற்றிபெற்று முதலிடத்துக்கு வந்துள்ளது. அக்கட்சி 25.7% வாக்குகளால் முன்னணியில் உள்ளது.
தனது 16 ஆண்டு பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறுகின்ற அதிபர் அங்கெலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி இந்தத் தேர்தலில் பெரும் பின்ணடைவைச் சந்தித்துள்ளது. கடந்த 2017 தேர்தலில் 32,9% வீத வாக்குகளைப் பெற்றிருந்த அக்கட்சி இம்முறை ஆக 24.1% வாக்குகளையே வெல்ல முடிந்துள்ளது. சான்சிலர் அங்கெலா தனது அரசியல் சகாப்த்தத்தை நிறைவு செய்யும் தருணத்தில் அவரது கட்சி சந்தித்துள்ள இந்தப் பின்னடைவு போர்க்காலத்துக்குப் பின் மையவலதுசாரிகள் 30 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளுடன் பெற்றுள்ள பெரும் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.
அங்கெலாவின் வாரிசாகக் கருதப்பட்ட வேட்பாளர் அர்மின் லாசெற் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு இழந்ததே கட்சியின் இந்தப் பின்னடைவுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
தொற்று நோய், மழை வெள்ளம் போன்ற அனர்த்தங்களுக்குப் பிறகு நடைபெற்றுள்ள இந்தத் தேர்தலில், நாட்டின் பசுமைக் கட்சி 14.8%வீத வாக்குகளை அள்ளி அதன் வரலாற்றில் மூன்றாவது பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. Annalena Baerbock தலைமையிலான பசுமைக் கட்சியே அடுத்த கூட்டணி அரசை அமைக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கின்ற "கிங் மேக்கராக" மாறியுள்ளது.கடந்த தேர்தலில் 8,9%வீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த அது இம்முறை இரண்டு மடங்கு அதிகமான ஆதரவைப் பெற்றுள்ளது.
மாற்றத்தை விரும்பும் ஜேர்மனியர்கள் தங்களுக்கே வாக்களித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள ஓலாஃப் ஸ்சோல்ஸ், தாங்களே வெற்றிபெற்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். அவரது சமூக ஜனநாயகக் கட்சி தலைமையில் அடுத்த கூட்டணி அரசு அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் நாட்டின் அடுத்த சான்சிலராக அவரே பதவியேற்கலாம்.
இரண்டு பிரதான கட்சிகளும் மிக நெருக்கமாக வந்துள்ளதால் மூன்றாவது சக்திகளே ஆட்சி அதிகாரத்தில் முக்கிய இடம்பிடிக்கவுள்ளன. கூட்டணி அரசு அமைப்பதற்கான பேச்சுக்கள் நிறைவடைய இன்னும் சில நாட்கள் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் புதிய சான்சிலர் பதவியேற்பது தாமதமாகலாம்.
கூட்டணி அரசு ஒன்றை அரசமைப்பதற்கான வாய்ப்புக்கள் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் சரிசமமாக இருப்பதால் பெரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை அங்கு காணப்படுகிறது. பசுமைக் கட்சியுடனும் ஏனைய லிபரல்களுடனும் பேரம் பேசும் கலந்துரையாடல்கள் சூடுபிடித்துள்ளன.
அடுத்த சான்சிலராகப் பதவிக்கு வரக் கூடியவராக முதனிலையில் இருக்கும் ஓலாஃப் ஸ்சோல்ஸ், அங்கெலாவின் கூட்டணி அரசில் நிதி அமைச்சராகப் பதவி வகித்து வந்தவர். அவரது இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி அங்கெலாவின் கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்தது.