பிரான்ஸில் எரிபொருள் பாதிப்பு: வருமானம் குறைந்த அனைவருக்கும் 100 ஈரோ!! எரிவாயு விலையேற்றம் ரத்து!!!


  • குமாரதாஸன். பாரிஸ்
பிரான்ஸில் பெற்றோல், டீசல் போன்றஎரிபொருள்களது விலைகள் அதிகரித்திருப்பது மக்களது வாழ்க்கைச் செலவில் தாக்கத்தைச் செலுத்தி உள்ளது. விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் நடுத்தரக்குடும்பங்களுக்கு 100 ஈரோக்கள் உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டம் ஒன்றை அரசு இன்று அறிவித்திருக்கிறது.

பிரதமர் ஜீன் காஸ்ரோ இன்றிரவு TF1 தொலைக்காட்சியில் தோன்றி இந்த நிதி உதவித் திட்டத்தை வெளியிட்டார். "பணவீக்கக் கொடுப்பனவு" ("inflation allowance") எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிதி உதவி 2000 ஈரோக்களுக்குக் குறைந்த தொகையை(net)மாத ஊதிய மாகப் பெறுகின்ற சகலருக்கும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.

மாத வருமானம் குடும்ப வருமானமாக அன்றித் தனி ஒருவரது ஊதியமாகவே
கணிக்கப்படும்.ஒரே குடும்பத்தில் 2000 ஈரோக்கு குறைந்த ஊதியம் பெறுகின்ற ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் தலா 100 ஈரோக்கள் உதவி கிடைக்கும்.

சுயதொழில் செய்வோர், வேலை இழந்தோர், ஓய்வூதியம் பெறுவோர் போன்றவர்களும் இந்த நிதி உதவித் திட்டத்தில் உள்ளடங்குவர்.

இந்தக் கொடுப்பனவைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. குடும்ப உதவித் தொகை போன்று அது உரியவர்களுக்கு வழங்கப்படும். 2000 ஈரோக்களுக்கு குறைந்த ஊதியம் பெறுகின்ற சுமார் 36 மில்லியன் தொழிலாளர்கள் இந்த 100 ஈரோ உதவித் தொகையைப் பெறவுள்ளனர்.
  • எரிவாயு விலையேற்றம் நிறுத்தம்
இதேவேளை, வீடுகளுக்கான எரிவாயுக் கட்டணத்தை அரசு 2022 ஆம் ஆண்டு முழுவதும் அதிகரிக்காதவாறு பார்த்துக் கொள்ளும் என்றும் பிரதமர் அறிவித்திருக்கிறார். அதன் படி கடந்த ஜனவரியில் செய்யப்பட்ட 4 வீத விலை அதிகரிப்புக்குப் பிறகு அண்மையில் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படுகின்றன. அதனை அரசு ஈடுகட்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியினால் முடங்கிப்போயிருந்த உலகின் பொருளாதார நடவடிக்கைகள் மீள இயங்கத் தொடங்கியிருப்பது எரிபொருள் பாவனையும் அதன் கட்டணங்களும் அதிகரிப்பதற்கு காரணமாகியுள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் பெற்றோல், டீசல் விலைகள் படிப்படியாக உயர்ந்து வருகின்றன. எரிபொருள்களது விலையேற்றம் மக்களது நாளாந்த வாழ்வில் நேரடியான தாக்கத்தைச் செலுத்தி உள்ளது.

பிரான்ஸில் தொழில் மற்றும் நாளாந்தப் போக்குவரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்துவோரை இந்த விலையேற்றம் பாதித்துள்ளது. அரசு உடனடியாக எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளது அதிபர் வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் இந்த விவகாரத்தை பெரும் எதிர்ப் பிரசாரமாக மாற்றிவிட எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.அது அரசுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.

கடைசியாக வெளியாகிய கருத்துக் கணிப்பு ஒன்றில் பிரான்ஸ் மக்களில் 75 வீதமானவர்கள் தங்களது கொள்முதல் சக்தி - பொருள் கொள்முதல் திறன் (Purchasing Power) 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறைந்து வருவதாகக் கூறியிருக்கின்றனர்.

குடியேறிகள், பயங்கரவாதம் போன்ற விவகாரங்களை முந்திக்கொண்டு மக்களது வாழ்க்கைத் தரம் பற்றிய விடயமே இந்தத் தடவை அதிபர் தேர்தலில் செல்வாக்குச் செலுத்தக் கூடும் என்று எதிர்வு கூறல்கள் வெளியாகியுள்ளன.
Previous Post Next Post