பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் , வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரெழு பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர்.
அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி தண்டனைப் பத்திரம் எழுத முற்பட்ட போது அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாருடன் முரண்பட்டார்.
அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றதனால் பொலிஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்தார்.
அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவரையும் தமது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் எனும் குற்றச்சாட்டில் பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.
பிரதேச சபை உறுப்பினர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலும் ஏனைய இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலும் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தன்னை ஈபிடிபி கட்சி என அறிமுகப்படுத்தி பல தடவைகள் பொலிஸாருடன் முரண்பட்டு கடமைக்கு இடையூறு விளைவிப்பவர் என்றும் பொலிஸார் கூறினர்.