பிரான்ஸில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று! கழிவு நீரில் வைரஸ் செறிவு அதிகம்!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸில் இலவசமாக வைரஸ் பரிசோதனை செய்கின்ற வசதிகள் நிறுத்தப்பட்டத்தைத் தொடர்ந்து தொற்றாளர்களது நாளாந்த எண்ணிக்கை தொடர்பான சரியான நிலைவரங்களை உடனுக்குடன் மதிப்பிடமுடியாத நிலை காணப்படுகிறது. 

எனினும் நாட்டின் பொதுச் சுகாதாரத்துறை கடைசியாக வெளியிட்டிருக்கின்ற அறிக்கை வைரஸ் பரவல் மெல்ல அதிகரித்து வருவதை வெளிப்படுத்தி உள்ளன.

நாட்டின் 44 மாவட்டங்களில் ஒரு லட்சம் குடியிருப்பாளர்களுக்கு 50 தொற்றாளர்கள் என்ற விகிதத்தைத் தாண்டி வைரஸ் பரவிவருவதை அந்த அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5,276 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாரிஸ் இல் து பிரான்ஸ் பிராந்திய மருத்துவமனைகளின் அவசர பிரிவுகளில் அனுமதிகள் சிறிதளவு அதிகரிக்கத் தொடங்கி உள்ளன.
 
தொற்று அறிகுறி இருப்போர் பரிசோதனைக்குச் செல்வது தாமதமாகுவதால் கணிப்பீடுகளை விடவும் அதிகமான எண்ணிக்கையான தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் தொற்றை மதிப்பிடுவதற்கு கழிவு நீரைப் (wastewater) பரிசோதிக்கும் வழிமுறை மீது கவனம் திரும்பி உள்ளது.
 
நாட்டின் சகல பகுதிகளிலும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்ற கழிவு தண்ணீரில் நடத்தப்பட்ட ஆய்வுகள் வைரஸ் செறிவு அதிகமாக இருப்பதைக் காட்டியுள்ளன. நாட்டின் அரைவாசிக்கும் அதிகமான கழிவு நீர் சேகரிப்பு மையங்களில் ஒக்ரோபர் மாதம் முதல் வைரஸ் கிரிமி அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

சனத் தொகையில் நான்கில் மூன்று பங்கினர் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியுள்ள நிலையில் புதிய திரிபுகளது பரவல் தொடர்ந்தும் தலையெடுப்பதால் மூன்றாவது ஊக்கத் தடுப்பூசியை சகல பிரிவினர்களுக்கும் பரவலாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்சமயம் மூன்றாவது தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே செலுத்தப்பட்டு வருகிறது.

நாடெங்கும் நடைமுறையில் உள்ள சுகாதாரப் பாஸில் மூன்றாவது தடுப் பூசியையும் இணைப்பதா என்பது தொடர்பில் நாட்டின் உயர் சுகாதார அதிகார சபையின் கருத்தை அறிவதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது.
Previous Post Next Post