பிரிட்டனில் வரும் திங்கட்கிழமை முதல் பெட்ரோல், டீசல் நிலையங்களுக்கான விநியோகச் சேவைகளை அந்நாட்டு ராணுவ வீரர்கள் மேற்கொள்வார்கள் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் கனரக வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதால் அங்கு எரிபொருள்களைப் பொதுமக்கள் அவசர அவசரமாக வாங்குகின்றனர்.
இவ்வாரத் தொடக்கத்திலிருந்து அங்கு பெட்ரோல், டீசல் நிலையங்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நிலைமையைத் தற்காலிகமாகச் சமாளிக்க சுமார் 200 ராணுவ வீரர்கள் எரிபொருள் விநியோகச் சேவைகளுக்கு உதவுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனால் பெட்ரோல், டீசல் நிலையங்கள் மீதான நெருக்கடி சற்றுக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான வட்டாரங்களில் எரிபொருள் பற்றாக்குறைப் பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும் சில வட்டாரங்களில் நிலைமை மோசமாக உள்ளது என்று கூறப்படுகிறது.