கனடாவில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்று உலகளாவிய ரீதியில் தமிழர்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில், கனடாவில் நேற்றைய நிகழ்வில் சர்ச்சைக்குரிய விடயமாக மாறிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும், அவருடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கலந்து கொண்டமையே இக் குழப்ப நிலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர்கள் குழு அங்கு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் அங்கிருந்து கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொண்டு கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
கனடாவில் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவிப்பு வெளியானதை அடுத்தே அவருக்கு எதிரான எதிர்ப்பலைகள் ஆரம்பமாகின.
சுமந்திரன் கனடாவிற்கு வரக்கூடாது என்று அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டு போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் கலந்து கொண்ட நேற்றைய கூட்டத்தில் சுமந்திரனுக்கு எதிராக போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸார் வந்து பிரச்சினைகளை கையாளும் அளவிற்கு அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சுமந்திரன் உரையாற்ற ஆரம்பிக்கும் போது, அங்கு குழுமியிருந்த ஒரு சிலர் அவரிடத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இதன்போது, தான் பேசி முடித்தவுடன் கேள்வி கேட்குமாறும், இப்போது கேட்க வேண்டாம் எனவும் சுமந்திரன் கூற உடனே அங்கிருந்தவர்கள், சுமந்திரனுக்கு எதிராக கோசங்களை எழுப்பியபடி 'சுமந்திரன் தமிழினத் துரோகி' என்று கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அதன்போது கூட்டத்தில் உடன் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் செய்வதறியாது நின்றிருந்ததோடு, சிலரின் பாதுகாப்போடு அங்கிருந்து சுமந்திரனோடு வெளியேறிச் சென்றார்.
அவர்கள் வெளியேறிச் செல்லும்போதும் கடுமையான சொற்களால் சுமந்திரன் மீது குழுமியிருந்தவர்கள் வசை பாடியதோடு, எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.
இதேவேளை, இலங்கையில் நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்காக அமெரிக்கா மற்றும் பிராந்திய சக்தியான இந்தியா ஆகியவற்றின் கூட்டிணைவில் புதிய கொள்கையொன்று வகுக்கப்படவுள்ள நிலையில் அதுபற்றி ஆழமாக ஆராய்வதற்காகவே இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பில் அமெரிக்காவிற்கு கலந்துரையாடலிற்காக தாம் செல்லவிருக்கின்றோம் என்ற அறிவிப்பு வெளியானவுடன் சுமந்திரனுக்கு இலங்கையில் எதிர்ப்புகள் கிளம்பின.
குறிப்பாக காாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இலங்கை அரசை காப்பாற்றுவதற்காகவே அமெரிக்கா செல்கின்றார் என்றும், இதில் தமிழர் நலன் சார் அம்சங்கள் இல்லை என்றும் அறிக்கை விடுத்து தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் தான் சுமந்திரனின் அமெரிக்க பயணம் அமைந்திருந்தது. அமெரிக்காவை தொடர்ந்து கனடாவுக்கு சென்றிருந்த சுமந்திரன் அங்கு இருக்கக் கூடிய புலம் பெயர் தமிழர்களை சந்தித்து கலந்துரையாட சென்றிருந்தாலும், அங்கு அவருக்கு நேர்ந்ததை அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை, அவர் மாத்திரம் அல்லாமல் உடன் சென்ற சாணக்கியனும்தான்.
இலங்கையில், பல அரசியல் வழக்குகளை தனது சாமர்த்தியத்தால் இலகுவாக கையாள தெரிந்த சுமந்திரனும், தனது பேச்சு மற்றும் மும்மொழித் திறமையால் நாடாளுமன்றத்தையே ஆட்டம் காண வைக்கும் சாணக்கியனும் நேற்றைய நிகழ்வினை தமக்கு சாதகமாக கையாள முடியாமல் வெளியேறிச் சென்றமை, திக்குத் தெரியாத காட்டில் தனித்து விடப்பட்டவர்கள் போல இருந்தமை தமிழர் அரசியல் பரப்பில் மாத்திரம் அல்ல சிங்கள அரசியல் தரப்பிலும், இன்றைய சிங்கள ஊடகங்களும் அந்த சம்பவத்தையே முதன்மைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்பதுபோல நேற்றைய சம்பவம் சுமந்திரனுக்கு அமைந்திருந்ததோடு, அங்கு செய்வதறியாது தனித்து நின்ற சாணக்கியனின் நிலையும் அவ்வாறே.
இலங்கை அரசியல் துறையில், சுமந்திரன் என்பவர் ஜனாதிபதி சட்டத்தரணி, சட்டத்துறையில் மிகவும் ஆளுமையான ஒரு நபர்.
தமிழ் மக்களிடத்தில் இவர் ஒரு பொக்கிஷமாக பார்க்கப்பட வேண்டியவர்களுள் ஒருவராக இருந்திருக்கலாம், ஆனால் அவருடைய ஆளுமையை தமிழ் மக்களுக்காக பயன்படுத்தியதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அரசியல்வாதிகளை காப்பாற்றுவதில் தனது ஆளுமையை வெளிப்படுத்துகிறாரே அன்றி தமிழ் மக்களுக்காக அவர் செய்த பணிகள் என்பது பூச்சிய நிலையிலேயே உள்ளது.
தனது சட்டப் புலமையை தமிழர்களுக்கு ஆதரவாக பயன்படுத்தாமையும், தனது அரசியல் ஸ்த்திரத்தன்மைக்காக வேண்டி தமிழர்களிடத்தில் ஒரு பேச்சும், சிங்கள மக்களிடத்தில் ஒரு பேச்சும் சர்வதேசத்திற்கு வேறொரு கதையும் கூறி தனது காய் நகர்த்தல்களை மேற்கொள்வதன் காரணமாக பல சர்ச்சைகளுக்கும் வெறுப்புக்களும் சுமந்திரன் சொந்தக்காரராக இருக்கின்றார்.
ஆனால், அவருடைய சட்ட ஆளுமைக்கு அவர் நினைத்திருந்தால் பல விடயங்களில் தமிழர்களின் சார்பாக பல விடயங்களை முன்னகர்த்தி கொண்டு வந்திருக்கலாம் என்றும், அதனை அவர் செய்யத் தவறியதும், அந்த கடமைகளை செய்ய விரும்பாததுமே தமிழர்களிடத்தில் அவர்மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்புக்களுக்கு காரணமாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.