பிரான்ஸில் அதிகரிக்கும் தொற்று! பாரிஸ் பிராந்தியப் பள்ளிகளில் மீண்டும் மாஸ்க் கட்டாயமாகிறது!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
அடுத்த வாரம் பாடசாலைகள் தொடங்கும் போது வகுப்பறைகளில் மாணவர்கள் மீண்டும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் சில நாட்களாக வைரஸ் தொற்றுக்கள் அதிகரிப்பதை அடுத்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகளில் மாஸ்க் அணிவதை அரசு கட்டாயமாக்கியிருக்கிறது.

பாரிஸ் பிராந்தியத்தின் அனைத்து மாவட்டங்கள் அடங்கலாக நாடெங்கும்39 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளிலேயே மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் இதனை இன்று அறிவித்துள்ளார்.

தொற்று நிலைவரம் சற்று மெலெழுவதால் சுகாதார விதிகள் சிலவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். தொற்று வீதம் ஒரு லட்சம் குடியிருப்பாளருக்கு 50 என்ற அளவைத் தாண்டியுள்ள மாவட்டங்களிலேயே பாடசாலைகளில் மீண்டும் அடுத்த கட்ட விதிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றன.

அனைத்துப் புனிதர்கள் நாள் விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகள் எதிர்வரும் திங்களன்று தொடங்குகின்றன. வகுப்பறைச் செயற்பாடுகள் வைரஸ் தொற்று வீதத்தை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பாவில் இங்கிலாந்து, ஜேர்மனி பெல்ஜியம், டென்மார்க் போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றுக்கள் அதிகரித்துள்ளன. கணிசமான எண்ணிக்கையானோர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதால் நோயின் தீவிர நிலையை எட்டுவோரது எண்ணிக்கை இந்தத் தடவை மிகவும் குறைவாக உள்ளது. அதனால் மருத்துவமனைகளில் முன்னரைப் போன்ற நெருக்கடிகள் இன்னமும் ஏற்படவில்லை.

வெப்பநிலை குறைந்து வருவது வைரஸ் பரவலுக்குச் சாதகமானது என்பதால் அடுத்துவருகின்ற நாட்களில் புதிய தொற்றலைகளைச் சில நாடுகள் சந்திக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post