உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை அரசு, தேர்தல் இன்றி ஒரு வருடத்திற்கு நீடிக்கவுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் என 340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நான்கு வருட கால அவகாசம் முடிவடைந்த பின்னர் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் கால நீடிப்புக்கு தற்போதைய தொற்றுநோய் நிலமை மற்றும் நாடு எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை அரசு மேற்கோள்காட்டுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்வினால் 4 ஆயிரத்து 917 உள்ளூராட்சி மன்ற வட்டாரங்களுக்கு தலா நான்கு மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்வதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை தேர்தலின்றி ஒரு வருடத்துக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீடு காரணமாக அரசுக்கு 19 ஆயிரத்து 668 மில்லியன் ரூபாய் செலவாகும்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அரசியல் கட்சிகள் எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் கூறினார்.