ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசியின் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்து மீண்டும் பரவும் கொரோனா!


  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
ஐரோப்பாவில்-குறிப்பாகத் தங்கள் மக்களுக்குத் தடுப்பு மருந்தை விரைந்து வழங்கத் தொடங்கிய வசதி படைத்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் - தோன்றியுள்ள ' கோவிட்' நிலைவரம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி ஏற்றுவதை வேகமாக முன்னெடுத்த சில நாடுகள் எண்பது வீதத்துக்கு மேல் அதன் இலக்கை எட்டமுடிந்தது. அதனால் தொற்றின் வேகமும் உரிழப்புகளும் குறைந்தன. மருத்துவமனைகள் அவற்றின் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்கப்பட்டன.

தலைவர்கள் தத்தமது நாடுகளைக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கும் உரைகளை உற்சாகமாக நிகழ்த்தினர்.

மீண்டும் உணவகங்களில் சாப்பிடும் கூட்டம் அதிகரித்தது.கைலாகு, கட்டியணைப்பு, முத்தம் பரிமாறல் என்று சமூகம் மீண்டும் இடைவெளி இன்றி இரண்டறக் கலந்தது. அத்தியாவசியம் என்று இருந்த மாஸ்க் ஒர் அருவருப்பான பொருளாகியது.

ஆனால் இலையுதிர் காலத்தில் நிலைமை மீண்டும் தலைகீழாக மாறத் தொடங்கியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி திட்டங்களைக் கவர்ச்சிகரமாக முன்னெடுத்த சில நாடுகளில் வைரஸ் தொற்று மீண்டும் உச்சங்களைத் தொட்டிருக்கிறது.
 
நத்தார் கொண்டாட்டங்களையும் விடுமுறைப் பயணங்களையும் அச்சுறுத்துகின்ற அளவுக்கு தொற்று மீண்டும் தீவிரமாக மேலெழுந்துள்ளது. மக்கள் நடமாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர மீண்டும் சட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

நெதர்லாந்து, ஒஸ்ரியா போன்றன பொதுமுடக்கத்தை ஒத்த பல பதில் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் வெடித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் நாடாக ஒஸ்ரியா தனது நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என்ற முடிவை எடுக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
  • ஏன் இந்த நிலைமை?
பைசர் போன்ற தடுப்பூசிகள் உயிரிழப்புகளையும் நோயின் தீவிரமான நிலையையும் குறைத்தாலும் அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அவற்றின் எதிர்ப்புத்திறன் குறைவதை சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

ஆரம்பத்தில் தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் படிப்படியாகக் குறைந்து அவர்கள் மீண்டும் தொற்றுக்கு ஆளாகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

எல்லா நாடுகளிலும் முதியவர்களுக்கே முதலில் முன்னுரிமை அடிப்படையில் ஊசி ஏற்றப்பட்டது.அவர்கள் ஆறு மாத காலத்தைக் கடந்த பிறகு புதிதாகத் தொற்றுக்கு இலக்காகி மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனாவுக்கு எதிரான போரில் ஒரே ஆயுதமாக நம்பப்பட்டவை தடுப்பூசிகள். ஆனால் முதல் இரண்டு தடுப்பூசிகள் வழங்கிய நோய்க் காப்பு (immune protection) பலவீனமடைந்துவருவதை ஐரோப்பிய நிலைவரம் உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
எல்லா நாடுகளிலும் சமூகத்தில் தடுப்பூசி ஏற்றாதோர் என்ற ஒரு சிறு பிரிவினர் உள்ளனர். அவர்கள் மூலமாகத் தொற்று ஏனையோருக்கு விரிவடைகிறது. உதாரணமாக ஐரோப்பாவில் மிக உச்ச அளவில்(89.1%) தடுப்பூசி செலுத்திய நாடு அயர்லாந்து. 

ஆனால் அங்கு அண்மை யில் புதிய தொற்றுக்கள் காரணமாக இரவில் நடமாட்டக் கட்டுப்பாடுகளை அறிவிக்கவேண்டி வந்தது. தடுப்பூசி ஏற்றாத சிறு கூட்டத்தினரிடையே வைரஸ் மறைந்து வாழ்ந்து நிலைமைக்கு ஏற்பத் தன்னைத்தக்கவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. 

உள்ளூர் நிலைமைக்கு ஏற்ப ஆங்காங்கே அது வடிவங்களை எடுத்து நிலைகொள்கிறது. டெல்ராவின் புதிய உப திரிபுகள் அதற்கு உதாரணமாகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • மூன்றாவது டோஸ் இறுதி ஆயுதமா?
வசதி படைத்த நாடுகள் மூன்றாவது தடுப்பூசி மூலம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம் என நம்பி அதற்கான திட்டங்களில் இறங்கி உள்ளன.

ஆனால் உலகில் முக்கால் பங்கு நாடுகளில் இன்னமும் முதல் தடுப்பூசி கூட செலுத்தி முடிக்கப்படவில்லை. இவ்வாறு தடுப்பூசிச் சமத்துவமின்மை நிலவும் உலகில் கொரோனா வைரஸை மனித குலம் வெற்றிகொள்ளப்போவதில்லை என்பதை உலக சுகாதார அமைப்பு இடித்துரைத்துவருகிறது.

ஐரோப்பாவில் மட்டும் மேலும் ஐந்து லட்சம் உயிரிழப்புக்களுக்கு வாய்ப்பிருப்பதாக அது மதிப்பிட்டுள்ளது. தற்சமயம் பரவலாகப் பேசப்படுகின்ற "தடுப்பூசியின் நோய்க்காப்பு வீழ்ச்சி" (vaccine immunity waning) என்பது கொரோனாப் போரில் வெல்வதற்குத் தடுப்பூசி மட்டும் போதாது என்ற கவலைக்குரிய முடிவைப் பகிரங்கமாகக் கூறவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்க், சமூக இடைவெளி போன்ற பழக்கவழக்கங்கள் நிலையான பாதுகாப்புக்காக இனியும் தொடரப்பட வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

தங்கள் சனத்தொகையினருக்கு தொட்டு தொட்டாக - ஒரு சீரான ஒழுங்கின்றி- தடுப்பூசி செலுத்தி வருகின்ற நாடுகளில் மிக வேகமாக ஊசியின் நோய்க்காப்பு இழக்கப்படும் வீதம் அதிகமாக இருக்கும். அத்தகைய நாடுகளில் மூன்றாவது ஊசி ஏற்றும் வசதிகள் சமீப காலத்தில் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை.

எனவே அந்நாடுகளில் டெல்ரா போன்ற வடிவங்கள் உள்ளூர் மட்டத்தில் தொடர்ந்து பரவும் ஆபத்துக் காணப்படுகிறது.

முதல் கட்டத் தடுப்பூசி செலுத்துவதில் இன்னமும் ஆரம்ப நிலையில் இருக்கின்ற வறிய நாடுகள், ஐரோப்பாவில் வழமை திரும்பி விட்டதாக எண்ணித் தத்தமது நாடுகளைத் திறந்துவிடுவதில் மும்முரமாக உள்ளன.

ஆனால் ஐரோப்பாவின் உண்மையான நிலைவரம் அந்த நாடுகளுக்கு ஓர் "முன்னெச்சரிக்கை" என்பதை சில நிபுணர்கள் நினைவூட்டுகின்றனர்.
Previous Post Next Post