இங்கிலாந்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 101 பேர் ஒமிக்ரோன் புதிய கொரோனா திரிபு தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் இங்கிலாந்தில் ஒமிக்ரோன் திரிபு தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது.
இதனைவிட இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 45,691 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்தது. இத்துடன் இங்கிலாந்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 இலட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இங்கிலாந்தில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் கிட்டத்தட்ட 89 வீதம் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 81 வீதத்திற்கும் அதிகமானோர் இரண்டு இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர். 36 வீதத்திற்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, ஒமிக்ரோன் புதிய திரிபு வைரஸ் டெல்டாவை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அதிக கவனத்துடன் பாதுகாப்பாக இருக்கும்படி மருத்துவ வல்லுனர்களும் விஞ்ஞானிகளும் வலியுத்தியுள்ளனர்.
அதேநேரம் ஒமிக்ரோன் வேகமாகப் பரவக் கூடியது என்றாலும் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது என அமெரிக்காவின் சிரேஷ்ட தொற்று நோய் நிபுணர் அந்தோனி பாசி தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோனால் மருத்துவமனை சேர்க்கை அதிகரிக்கும். ஆனால் இறப்புகள் அதிகமாக இருக்காது எனவும் அவா் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.