நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டைச் சபையில் சமர்ப்பிப்பதற்கான கூட்டம் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை(07.12.2021) பிற்பகல்-02 மணி முதல் சபை மண்டபத்தில் நடைபெற்றது.
நீண்ட வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து சபையின் செயலாளர் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை வெளிப்படையாகச் சபையின் வாக்கெடுப்பிற்கு விட்டார்.
இதன்போது 20 உறுப்பினர்களைக் கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு ஆதரவாகவும், 08 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
தவிசாளர் உள்ளிட்ட யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கு ஆதரவான உறுப்பினர்கள்,ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம்(சுயேட்சைக் குழு), தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கியதேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாகவும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராகவும் வாக்களித்தனர்.