ஜேர்மனியில் மனைவி, 3 பெண் குழந்தைகளையும் கொன்று விட்டுத் தற்கொலை செய்த தந்தை!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
ஜேர்மனியில் பேர்ளின் நகருக்கு தெற்கே வீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் ஐவரின் சடலங்களைப் பொலீஸார் மீட்டுள்ளனர். அது தந்தை ஒருவர் மேற்கொண்ட கொலைகள் என்பதைப் பூர்வாங்க விசாரணைகள் உறுதிப்படுத்தி உள்ளன.

40 வயதான டேவிட் (Devid R) என்பவரே நாற்பது வயதான தனது மனைவி, பத்து, எட்டு, நான்கு ஆகிய வயதுகளையுடைய பெண் குழந்தைகள் ஆகிய நால்வரையும் சுட்டும் வெட்டியும் கொன்று விட்டுத் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார் என்று பொலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலைகள் நடந்த சமயம் குடும்பத்தினர் கொரோனா தொற்றுக் காரணமாக சுய தனிமையில் இருந்துள்ளனர் என்ற தகவலை ஜேர்மனிய செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கிறது.
 
வீட்டில் ஆட்களின் நடமாட்டம் எதனையும் காணாததால் சந்தேகம் கொண்ட அயலவர் ஒருவர் ஜன்னல் வழியாக உள்ளே நோட்டமிட்டபோது வீட்டின் உள்ளே தரையில் சடலங்கள் கிடப்பதைக் கண்டு திடுக்குற்றுப் பொலீஸாருக்கு அறிவித்திருக்கிறார். 

வீட்டுக்கு விரைந்து வந்த பொலீஸார், அங்கிருந்து வளர்ப்பு நாய்க்குட்டி ஒன்றை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. குழந்தைகள் படுக்கையில் வைத்து சுடப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

சடலங்களில் வெட்டுக் காயங்களும் காணப்படுகின்றன. வீட்டுக்குள் வெளியாட்கள் எவரும் நுழைந்தமைக்கான தடயங்கள் எதும் இல்லை என்பதை விசாரணையாளர்கள் உறுதிப்படுத்தி யுள்ளனர். 

கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது எனச் சந்தேகிக்கப்படும் கைத் துப்பாக்கி வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசென்ஸ் பெற்றிருந்தனரா என்பது தெரியவரவில்லை.

ஆசிரியராகத் தொழில் புரிகின்ற அந்தக் குடும்பத் தலைவர் பல்கலைக்கழகம் ஒன்றில் தொழில் செய்கின்ற தனது மனைவிக்குத் தடுப்பூசிச் சான்றிதழை போலியாகத் தயாரித்து வழங்கியிருந்தார் என்றும் அது பல்கலைக் கழக நிர்வாகத்துக்குத் தெரிய வந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருந்த வேளையிலேயே குடும்பத்தைக் கொன்று தானும் உயிர்மாய்த்துள்ளார் என்பது விசாரணயாளர்களுக்குத் தெரிய வந்துள்ளது.

வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பல பக்கங்களிலான கடிதம் ஒன்றில் அந்தத் தந்தை தனது செயலுக்கான காரணத்தை எழுதியுள்ளார். போலிச் சான்றிதழ் தயாரித்த குற்றத்துக்காகத் தாங்கள் சிறை செல்ல நேர்ந்தால் குழந்தைகள் தனித்துப் போய்விடுவார்கள். அதனைப் பொறுக்க முடியாததாலேயே முழுக் குடும்பத்தையும் கொன்று தனது வாழ்வை முடித்துக் கொள்வதாக அக்கடிதத்தில் எழுதியிருக்கின்றார்.

சமூக நலசேவையாளர்களால் குழந்தைகள் தங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டுவிடுவார்கள் என்று அஞ்சுவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
அமைதியாக வாழ்ந்த குடும்பம் ஒன்றுக்கு நேர்ந்த இந்த அவல முடிவு சுமார் மூவாயிரம் பேர் வசிக்கின்ற Senzig (Brandenburg)என்ற கிராமத்தைப் பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

ஜேர்மனியில் தொழில் புரிபவர்கள் தடுப்பூசி ஏற்றியமைக்கான சான்றிதழைத் தங்களது தொழில் நிர்வாகங்களிடம் சமர்ப்பிக்கவேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது.
Previous Post Next Post