பட்டப்பகலில் நடந்த கொடூரம்! 9 வயதுச் சிறுமி எரித்துக் கொலை?


தமிழகம் - திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்பது வயதான மாணவி ஒருவர் பாடசாலை வளாகத்தில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூர் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். இவரின் ஒன்பது வயதான மகள் பிரித்திகா பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பாடசாலையில் கல்வி கற்கின்றார்.

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் பிரித்திகா நேற்றைய தினம் வழமை போல் பாடசாலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், காலை 11 மணியளவில் பிரித்திகா வகுப்பறையைவிட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. அதன்பின்னர் வகுப்பறைக்கு வரவில்லை.

இந்தநிலையில் மாணவி பிரித்திகா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவியின் உடலை கைப்பற்றிய பொலிஸார் குறித்த மாணவியை யாரும் எரித்துக் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Previous Post Next Post