யாழ். மாநரசபை வரவு - செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க கூட்டமைப்பு முடிவு!


யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை புதன்கிழமை (டிசெ. 15) மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்வைக்கவுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்ட நிலையில் நாளை சபைக்கு வருகிறது.

இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதே நிலைப்பாடுடன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டாலும் நாளைய சபை நடவடிக்கையின் போது தமது கட்சியின் முடிவை அறிந்து கொள்ளுமாறு அதன் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

எனினும் நாளைய தினம் பாதீட்டு விவாதத்தின் பின்னர்தான் ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் 45 உறுப்பினர்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 16 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களில் முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவான 10 உறுப்பினர்களும் எதிராக 3 உறுப்பினர்களும் உள்ளனர்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் 11 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு உறுப்பினரும் அடங்குகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மூவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒருவரும் என 24 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மூவரும் வெளிநடப்பு செய்யும் முடிவை எடுத்தால் பாதீடு நிறைவேற்றப்படுவதற்கும் சந்தர்ப்பம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post