யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்றிருந்த இளைஞன் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் மற்றும் பெண் ஒருவர் உட்பட 4 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
யாழ்.ஆனைக்கோட்டையிலிருந்து பூநகரி - கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் கடந்த 26ம் திகதி இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் 22 வயதான இளைஞன் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவத்தையடுத்து தாக்குதல் நடத்திய தரப்பு கடல்வழியாக படகு மூலம் தப்பிச் சென்றதாக கூறப்பட்ட நிலையில் நேற்றய தினம் பூநகரி பொலிஸ் நிலைய விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொறுப்பதிகாரி சதுரங்க தலைமையிலான குழுவினர், பிரதான சந்தேகநபர் மற்றும் ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பூநகரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.