இங்கிலாந்தில் அதிர்ச்சியளிக்கும் கொரோனாத் தொற்று! கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய பிரதமர்!! எதிர்ப்புத் தெரிவித்துப் பதவி விலகிய அமைச்சர்!!!


இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த வாரம் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் போரிஸ் ஜான்சன் விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த பிரெக்ஸிட் அமைச்சர் டேவிட் புரோஸ்ட் நேற்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

போரிஸ் ஜோன்சனின் இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு அவரது சொந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆனால் அதை பொருட்படுத்தாத பிரதமர் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறார். இந்நிலையில் அந்த புதிய உத்தரவின்படி இரவு நேர கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற நெரிசலான இடங்களுக்கு செல்லும் மக்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கபட்டுள்ளது.

டேவிட் புரோஸ்ட் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கையின் முன்னேற்றத்துக்கு பெரும் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 82,886 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது.

இங்கிலாந்தில் கடந்த 15-ம் திகதி 78,610 பேருக்கும், 16-ம் திகதி 88,376 பேருக்கும், 17-ம் திகதி 93,045 பேருக்கும், 18-ம் திகதி 90,418 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் இங்கிலாந்தில் 82,886 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதன்மூலம் அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 13 இலட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் 45 பேர் இறந்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 97.83 இலட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது 14.30 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Previous Post Next Post