பிரான்ஸில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய தடை!


  • குமாரதாஸன். பாரிஸ்.
கழிவுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (loi anti-gaspillage de 2020) சந்தைகள், கடைகளில் இனிமேல் பழங்கள்,மரக்கறிகள் என்பவற்றைப் பிளாஸ்ரிக் பொதிகளில் வைத்து விற்பது தடைசெய்யப்படுகிறது. பிரான்ஸில் நாடு முழுவதும் இச்சட்டம் ஜனவரி முதல் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

அப்பிள், பேரிக்காய், வாழைப்பழம், தோடம்பழம் ,கிளெமென்டைன், கிவி, மாண்டரின், எலுமிச்சை, திராட்சைப்பழம், புறூண் , முலாம்பழம், அன்னாசி, மாம்பழம், காக்கிப் பழம்,கொடித்தோடை போன்றவற்றையும்-(les pommes, poires, bananes, oranges, clémentines, kiwis, mandarines, citrons, pamplemousses, prunes, melons, ananas, mangues, fruits de la passion kakis) - லீக்ஸ், சீமைச் சுரைக்காய், கத்தரி, குடை மிளகாய், உருளைக்கிழங்கு, கரட், வட்டத் தக்காளி, வெங்காயம், கோவா, சூபிளவர் முள்ளங்கி, வேர்க் கிழங்குகள் உட்பட பல மரக்கறிகளையும் (les poireaux, courgettes, aubergines, poivrons, concombres, pommes de terre, carottes, tomates rondes, oignons, navets, choux, choux-fleurs, courges, radis, panais, topinambours ou encore les légumes racine) - பிளாஸ்ரிக் பைகள், பெட்டிகளில் விற்பபனை செய்வது தடைசெய்யப்படுகிறது.

ஆயினும் இச் சட்டத்தில் அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குச் சில தளர்வுகள் இருக்கும். 1.5 கிலோக் கிராமுக்கு மேற்பட்ட நிறையுடைய பழங்களையும் மரக்கறிகளையும் தொடர்ந்தும் பிளாஸ்ரிக் பக்கெற்றுகள், பைகளில் பொதி செய்து விற்பதற்கு 2023 ஆம் ஆண்டு வரை அனுமதிக்கப்படும். 

அதேபோன்று பைகளில் இல்லாமல் மொத்தமாக விற்பதால் சேதமடையக்கூடிய சிவப்புப் பழங்கள்(Fraises, framboises et myrtilles) போன்றவற்றை 2026 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் பிளாஸ்ரிக்கில் பொதியிடலாம்.

சட்டத்தை மீறிப் பிளாஸ்ரிக் பக்கெற்றுகளில் பழங்கள், மரக்கறிகளை விற்பது அபராதத்துக்குரிய குற்றமாகும். நாள் ஒன்றுக்கு 1,500 ஈரோக்கள் முதல் 15, 000 ஈரோக்கள் வரை அபராதத் தொகையாகச் செலுத்த நேரிடலாம்.

வெளியே தெரியக் கூடியவாறு கண்ணாடிப் பிளாஸ்ரிக் உறைகளில் பழங்கள், காய்கறிகளை வாங்கிப் பழக்கப்பட்டவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இந்தப் புதிய சட்டம் பல சிரமங்களை ஏற்படுத்துகின்ற போதிலும் பிளாஸ்ரிக் கழிவுகளைக் குறைப்பதில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.பதிலாகக் கடதாசிப் பைகள் கடதாசி மட்டைப் பெட்டிகள் பொதியிடலுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதால் அவற்றுக்கான கேள்வி திடீரென அதிகரித்துள்ளது
Previous Post Next Post