- குமாரதாஸன். பாரிஸ்.
பாரிஸ் நகரில் மீண்டும் மாஸ்க் அணிந்து நடமாடுவது கட்டாயமாக்கப்படுவதாகப் பொலீஸ் தலைமையகம் அறிவித்திருக்கிறது. கார்கள் போன்ற வாகனங்களின் உள்ளே இருப்போரும் சைக்கிள் பயணிகளும் தவிர்ந்த ஏனையோர் மாஸ்க் அணிவது அவசியமாக்கப்பட்டுள்ளது. மீறுவோர் அபராதம் செலுத்த நேரிடும்.
இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தின் Hauts-de-Seine , Val-de-Marne , Val d'Oise , Yvelines, Essonne மாவட்டங்களிலும் நாளை வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி முதல் வீதிகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை வெள்ளிக்கிழமை ஆண்டின் இறுதிநாளை ஒட்டியும் பல கட்டுப்பாடுகளைப் பொலீஸ் தலைமையகம் அறிவித்திருக்கிறது. வீதிகளில் கூடுவதும் மது அருந்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இரவிரவாக மது அருந்துவதையும் களியாட்டங்களையும் தடுப்பதற்காக பாரிஸில் சகல அருந்தகங்களும் குடிபான நிலையங்களும் சனி, ஞாயிறு இரு தினங்களும் அதிகாலை 02.00 மணிக்கு மூடப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.(fermeture des débits de boissons).
புத்தாண்டை ஒட்டி முதல் நாள் இரவில் மக்கள் கூட்டம் களைகட்டுகின்ற Champs-Élysées மற்றும் சென் நதியின் கரையோரங்களில் (berges de la Seine) கூடுவதும் மது அருந்திக் கும்மாளம் அடிப்பதும் இதன் மூலம் முற்றாகத் தடுக்கப்படவுள்ளது.
பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டிருக்கின்ற எந்த இடங்களிலும் நடனம் மற்றும் களியாட்டங்கள் செய்வதற்கும் பொலிஸ் தலைமையகம் தடை விதித்திருக்கிறது. (toutes activités de danse dans tous les établissements recevant du public")
சுமார் ஒன்பது ஆயிரம் பொலீஸாரும் இராணுவத்தினரும் புத்தாண்டு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மக்கள் கூடுவது கட்டுப்படுத்தப்பட்டாலும் பொதுப் போக்குவரத்துகள் வெள்ளி இரவு முழுவதும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் நகர சபையினால் Champs-Élysées பகுதியில் வருடாந்தம் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த இன்னிசை அரங்கமும் வாண வேடிக்கை நிகழ்வும் நாளை வெள்ளி இரவு நடைபெறமாட்டா என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.