முதலாவது “ஒமெக்ரோன்” தொற்று பிரான்ஸின் பாரிஸ் பிராந்தியத்தில் அறிவிப்பு!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பாரிஸ் பிராந்தியத்தில் முதலாவது ஒமெக்ரோன் தொற்றாளர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது. நைஜீரியா சென்று திரும்பி வந்து பாரிஸின் புறநகர்ப் பகுதியான Seine-et-Marne இல் தங்கியிருந்த ஒருவருக்கே ஒமெக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸின் பெருநிலப் பரப்பில் அடையாளம் காணப்பட்ட முதலாவது தொற்றாளர் இவரே என்று பிராந்திய சுகாதாரப் பணியகம் (ARS Île-de-France) தெரிவித்திருக்கிறது. 50-60 வயதுக்கு இடைப்பட்ட அந்த நபர் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி நைஜீரியாவில் இருந்து விமானம் மூலம் பாரிஸ் திரும்பியிருந்தார். அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அது ஒமெக்ரோன் வைரஸ் தொற்றா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் கடல் கடந்த நிர்வாகப் பிராந்தியமான ரியூனியன் (Reunion) தீவில் 53 வயதுடைய ஒருவருக்கு ஒமெக்ரோன் தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்டி ருந்தது. புதிய ஒமெக்ரோன் திரிபு தொற்றாளர்கள் என்ற சந்தேகத்தில் 13 பேரது மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன என்று அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பிரான்ஸில் ஏனைய கோவிட் திரிபுகளின் தொற்றுக்கள் உச்ச அளவை எட்டியுள்ளன. நேற்று மாலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவாகிய தொற்றுக்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
Previous Post Next Post