பிரித்தானியாவில் கிறிஸ்துமஸை முன்னிட்டு பிரதமர் அறிவிக்கவுள்ள மகிழ்ச்சி செய்தி!


பிரித்தானியாவில் கிறிஸ்துமஸுக்கு கொரோனா வைரஸ் விதிகள் விதிக்கப்படாது என்ற மகிழ்ச்சியூட்டும் செய்தியை மக்களுக்கு சொல்ல பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது உலகை அச்சுறுத்திவரும் Omicron வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மற்ற நாடுகளை போலவே பிரித்தானியாவும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பயண விதிகளை அமுல்படுத்தி வருகிறது.

ஒரு வாரத்திற்கு முன்பே, முகக்கவசம் அணியும் ஆணைகள் மற்றும் பிசிஆர் சோதனைகளைப் பயன்படுத்துவதற்கான தேவைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த கட்டுப்பாடுகள் குறித்த அடுத்த விளக்கம் வரும் டிசம்பர் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதுவரை நிபுணர்கள் இந்த Omicron மாறுபாட்டின் ஆபத்துக்களை ஆய்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அடுத்த கொரோனா வைரஸ் அறிவிப்பை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, கிறிஸ்துமஸுக்கு கொரோனா வைரஸ் விதிகள் விதிக்கப்படாது, பிரித்தானிய மக்கள் எந்த தடையும் இல்லாமல் தங்கள் கிறிஸ்துமஸ் திட்டங்களைத் தொடரலாம் என்ற பிரதமர் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி சன் செய்தி நிறுவனத்தின்படி, பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த அறிவிப்பை கிறுஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்னர் முன்வைக்க திட்டமிட்டுள்ளார்.

'இரண்டாவது ஆண்டாக கிறிஸ்மஸை அழித்துவிட்டால், பொதுமக்கள் தங்களை மன்னிக்க மாட்டார்கள்' என்ற ஏகோபித்த அச்சத்தில் அமைச்சர்கள் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Previous Post Next Post