டெல்ரா-ஒமெக்ரோன் கலந்த “இரட்டைத் தொற்று" ஏற்படும் ஆபத்து! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
ஏற்கனவே பரவியுள்ள டெல்ரா திரிபும் தற்சமயம் தோன்றியுள்ள ஒமெக்ரோன் திரிபும் ஒரே சமயத்தில் ஒருவருக்குத் தொற்றக்கூடிய("dual infection") ஆபத்து உள்ளது. விரைவில் மிகக் குறுகிய காலத்தில் இந்த இரு திரிபுகளும் இணைந்து கொள்ளும் (coexist) ஏது நிலை காணப்படுகிறது.

'மொடோனா' தடுப்பூசி நிறுவனத்தின் தலைமை மருத்துவ நிபுணர் டாக்டர் போல் பேர்ட்டன் (Dr Paul Burton) லண்டனில் இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடனான(Science and Technology Committee) கூட்டத்தில் இவ்வாறு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.
 
ஒமெக்ரோன் ஒர் உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என நினைக்கிறேன். மூன்று நாட்களில் அது இரட்டிப்பு வேகத்தைக் காட்டியிருக்கிறது.

ஒருவர் உடலில் இரண்டு வைரஸ்களையும் காவ முடியும். அது உண்மையில் மிக மோசமானது. ஏனெனில் அவை இரண்டும் மரபணுக்களைப் பகிர்ந்து கொள்ளவும்(share genes) மரபணுக்களை உருவாக்குவதற்கும் அது வாய்ப்பளிக்கிறது.
 
இரட்டைத் தொற்றுக்கு ("dual infection") இலக்காகுவது மோசமான உயிராபத்தை ஏற்படுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இரண்டு திரிபுகளது இணைவு தனித்தனியே வேறு புதிய திரிபுகள் உருவாகுவதற்கு மிகவும் வாய்ப்பானதாகும். இவ்வாறு அவர் அங்கு தெரிவித்தார்.

இரண்டு வைரஸ் திரிபுகள் ஒருவருக்கு ஒரேசமயத்தில் தொற்றுவது அரிதானது என்றே நம்பப்பட்டுவருகிறது. முன்னர் பெல்ஜியம் நாட்டில் 90 வயதான பெண் ஒருவர் கொரோனா வைரஸின் 'அல்பா' (Alpha) 'பேற்றா' (Beta) ஆகிய இரண்டு திரிபுகள் தொற்றிய நிலையில் உயிரிழந்தார். அவர் தடுப்பூசி எதனையும் பெற்றிருக்கவில்லை.

இதேவேளை, லண்டனில் நாளாந்தத் தொற்றுக்களில் 44 வீதமானவை ஒமெக்ரோன் திரிபினாலேயே ஏற்படுவதாக இங்கிலாந்தின் சுகாதாரப் பாதுகாப்பு முகவரகத்தைச் சேர்ந்த(UK Health Security Agency) மருத்துவர் சுசன் ஹொப்கின்ஸ் (Dr Susan Hopkins) தெரிவித்தார். 

ஒமெக்ரோன் பரவத் தொடங்கிய பின்னர் மறு தொற்றுக்கு இலக்காவோரது எண்ணிக்கை அதிகரித்துள்ளது டெல்ராவுடன் ஒப்பிட்டால் ஒமெக்ரோன் மூன்று முதல் எட்டு மடங்கு வரை மறு தொற்றை (reinfection) ஏற்படுத்துகிறது. அதாவது ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு ஆளாகியவர்கள் பலரை மீண்டும் ஒமெக்ரோன் தாக்கிவருகிறது - என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இதுவரை உருவாகிய கொரோனா வைரஸின் திரிபுகள் எதுவுமே ஒமெக்ரோன் போன்று மிக வேகமாகப் பரவியதில்லை என்ற தகவலை உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) இன்று செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.

உலகெங்கும் இதுவரை 77 நாடுகளில் ஒமெக்ரோன் பரவியுள்ளது. இதைவிடத் தெரியாதவாறு மேலும் பல நாடுகளுக்கும் அது பரவியுள்ளது. மக்கள் ஒமெக்ரோன் திரிபைக் குறைந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கணிக்கிறார்கள்.

ஆனால் ஆயத்த நிலையில் இல்லாத சுகாதாரக் கட்டமைப்புகளை மோசமாகப் பாதிக்கும் அளவுக்கு அது நோயாளர் களை உருவாக்கிவிடுமோ என நாங்கள் அஞ்சுகின்றோம். இவ்வாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post