ஜேர்மனியின் புதிய அதிபர் பொறுப்பேற்றார்! தளபாட விளம்பரத்தில் முன்னாள் அதிபர் அங்கெலா! (படங்கள்)


  • குமாரதாஸன். பாரிஸ்.
சான்சிலர் அங்கெலா மெர்கல் நேற்றுத் தனது கடமைகளில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகி வீட்டுக்குத் திரும்பியுள்ளார். புதிய சான்சிலர் ஓலாஃப் சோல்ஸ் அதிகாரத்தை முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

36 ஆண்டுகால அரசியல் வாழ்வையும் 16 ஆண்டுகால சான்சிலர் பதவியையும் நிறைவு செய்துள்ள மெர்கல் அம்மையாருக்கு ஜேர்மனியிலும் வெளி நாடுகளிலும் பிரியாவிடை வாழ்த்துச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

மெர்கலை கௌரவித்தும் அதேசமயம் முன்னாள் சான்சிலர் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தியும் பிரபல 'இக்கியா'( IKEA) தளபாட விற்பனை நிறுவனம் தனது விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கதிரை ஒன்றில் அங்கெலா மெர்கல் தனது வீட்டில் அமர்ந்திருக்கின்ற காட்சி இடம்பெற்றுள்ளது. "இறுதியில் வீட்டில்..."(“Endlich zu Hause”) என்று அந்த முழுப் பக்கப் பத்திரிகை விளம்பரத்துக்குத் தலைப்பிட்டுள்ளது "இக்கியா".

இதேவேளை, அங்கெலா அம்மையாரின் ஆசனத்தில் அமரவுள்ள நாட்டின் புதிய தலைவரான ஓலாஃப் சோல்ஸை சான்சிலராகத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பும் அவரது பதவியேற்பு நிகழ்வும் பேர்ளி னில் உள்ள நாடாளுமன்றத்தில் (Bundestag)நேற்று நடைபெற்றன.புதிய சான்சிலருக்கு ஆதரவாக 395 உறுப்பினர்களும் எதிராக 303 உறுப்பினர்களும் வாக்களித்தனர். சான்சிலர் தெரிவு செய்யப்படுவதற்கு 369 ஆதரவு வாக்குகள் போதுமானதாகும்.

ஓலாஃப் சோல்ஸ் வாக்களிப்பில் வெற்றி பெற்றதை அடுத்து சம்பிரதாய முறைப்படி நாட்டின் ஜனாதிபதி பிராங்க்-வோல்டர் ஸ்ரெய்ன்மியர் (Frank-Walter Steinmeier) அவரைப் புதிய சான்சிலராக அறிவித்தார். பின்னர் பதவியேற்பு நிகழ்வு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போரின் பின்னர் பதவியேற்கின்ற ஒன்பதாவது சான்சிலர் சோல்ஸ் ஆவார்.

ஓலாஃப் சோல்ஸ் தலைமையில் அவரது மைய இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி, (centre-left Social Democrats), பசுமைக் கட்சி (Greens), வணிக சார்பு சுதந்திர ஜனநாயகக் கட்சி(Free Democrats) ஆகிய முத்தரப்புகள் இணைந்த கூட்டணி அரசை நிறுவும் உடன்படிக்கை கடந்தவாரம் கைச்சாத்திடப்பட்டது.17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நாளை பாரிஸ் வருகிறார்
புதிய சான்சிலராகப் பதவியேற்ற கையோடு முதல் உத்தியோகப் பயணமாக ஓலாஃப் சோல்ஸ் நாளை வெள்ளிக்கிழமை பாரிஸ் வருகிறார். அன்றைய தினம் அதிபர் மக்ரோன் அவருக்கு மதிய போசன விருந்தளிக்கவுள்ளார் என்று எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது. இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர் மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
Previous Post Next Post