வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை பிரஜைகளைத் திருமணம் செய்யும்போது பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற இறுக்கமான கட்டுப்பாட்டை அரசு கொண்டு வந்திருப்பதை எதிர்த்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி திஷ்யா வெரகொட இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இலங்கையில் வெளிநாட்டுப் பிரஜையின் திருமணத்தை பதிவு செய்வதற்கு சில முன்நிபந்தனைகளை விதிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனது பிள்ளைகளும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள். ஒரு நாள் அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பும் போது அதற்கு பாதுகாப்பு செயலாளரிடம் அனுமதி கேட்பதை நான் விரும்பவில்லை.
அவர்கள் விரும்பும் யாரையும் திருமணம் செய்து கொள்ள என் அனுமதி கூட தேவையில்லை. தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள அவர்கள் ஏன் வேறு சிலரிடம் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களிம் அனுமதி பெற வேண்டும்? எனவும் சட்டத்தரணி திஷ்யா வெரகொட கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய முன்நிபந்தனைகள் சட்டவிரோதமானது. சட்டத்திற்கு புறம்பானது, பகுத்தறிவற்றது, நியாயமற்றது, அபத்தமானது, அதிதீவிரமானது. அத்துடன், அரசியலமைப்பிற்கு முரணானது என்று குறிப்பிட்ட அவர், இந்த முறைப்பாட்டை முன்னுரிமையின் அடிப்படையில் விசாரிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவை கோரியுள்ளார்.
2022 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான திருமண விவகாரம் குறித்த சுற்றறிக்கை அமுலாகும் எனக் கூறப்படும் நிலையில் அதனை அமுல்படுத்த வேண்டாம் என பதிவாளர் நாயகத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கட்டளையிட வேண்டும் எனவும் திஷ்ய வேரகொட முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
2022.01.01 முதல் வெளிநாட்டுப் பிரஜாவுரிமை உடைய ஒருவர் இங்கு இலங்கைப் பிரஜை ஒருவரைத் திருமணம் செய்வதாயின் தாம் வதியும் நாட்டிலிருந்து தாம் குற்றச் சம்பவம் எதனுடனும் தொடர்பில்லாதவர் என அந்நாட்டின் பாதுகாப்புப் பிரிவிலிருந்து உரிய சான்றிதழ் பெற்று வந்து அதனை பத்தரமுல்லையிலிருக்கும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் சமர்ப்பித்து இலங்கைப் பதிவாளர் நாயகத்தின் முன் அனுமதி பெறவேண்டும் என அரசால் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சுகாதார நிலை பற்றிய சுய தெளிவுபடுத்தல் அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தாலும் சாதாரண விவாக பதிவாளர்கள் (கிராம பதிவாளர்கள்) மூலம் பதிவு செய்ய முடியாது. பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் மூலமே பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.