இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்படாவிட்டால் ஜனவரியில் மற்றொரு பெரிய கொரோனா அலை ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், இந்த அலையில் 25,000 முதல் 75,000 வரை உயிரிழக்கலாம். தடுப்பூசிகளின் விணைத்திறனைப் பொறுத்து இறப்புக்களின் எண்ணிக்கை அமையும் எனவும் அவா்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பான நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் மோசமான சூழ்நிலை எப்படி இருக்கும்? என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என இது குறித்த ஆய்வில் தொடர்பில்லாத விஞ்ஞானி ஒருவர் கூறினார்.
லண்டன் LSHTM மருத்துவக் கல்லூரி மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் தெளிவாக இல்லை. கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபினால் விளைவுகள் எவ்வாறு இருக்கும்? என்று அது கூறவில்லை. ஆனால், சாத்தியமான விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொவிட் பூஸ்டர் தடுப்பூசியை துரிதப்படுத்துவதன் மூலம் ஒமிக்ரோன் அலையின் தாக்கத்தைக் குறைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஒமிக்ரான் மிக வேகமாகப் பரவுகிறது. இது கவலையளிக்கிறது. அதோடு இந்த ஆண்டின் இறுதிக்குள் இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் ஆதிக்கம் செலுத்தும் வடிவமாக இது இருக்கலாம் என ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் நிக் டேவிஸ் கூறினார்.
தற்போது இங்கிலாந்தில் பரவலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள போதிலும் வேகமாக கொரோனா பரவி வருகிறது. இத்திரிபு முந்தைய கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பு இல்லாத காலத்தில் பரவியதை விட இப்போது அதிவேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் எங்கள் பார்வையின் அடிப்படையில் ஜனவரியில் பிரிட்டனில் ஒரு பெரிய ஒமிக்ரோன் கொரோனா அலையை எதிர்பார்க்கலாம் என டாக்டர் டேவிஸ் கூறினார்.