புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன்!


  • குமாரதாஸன். பாரிஸ்.
கொடிய தொற்று நோய்க்கு மத்தியில்இரண்டாவது புத்தாண்டு பிறக்கிறது. அதிபர் எமானுவல் மக்ரோன் வருடப் பிறப்பை ஒட்டி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "2022 தொற்று நோயிலிருந்து விடுபடுகின்ற ஆண்டாக இருக்கலாம். அவ்வாறு நம்புகிறேன் - நம்புவோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார். 

அதேசமயம் வரவிருக்கின்ற சில வாரங்கள் மிகவும் நெருக்கடியானவை என்றும் அவர் எச்சரிக்கை செய்தார்.ஆனால் புதிய கட்டுப்பாடுகள் வருமா என்பது தொடர்பில் எதனையும் குறிப்பிடவில்லை.

எங்களிடம் இருக்கின்ற ஒரே ஆயுதம் தடுப்பூசி ஒன்றுதான் என்பதை மீளவும் நினைவூட்டிய அவர், ஊசியை ஏற்றிக் கொள்ளாத ஐந்து மில்லியன் மக்களையும் அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.உரிமைகளை விட கடமைகள் மேலானவை என்பதை அவர் திரும்பவும் கூறினார்.

மக்ரோனின் பதிவு செய்யப்பட்ட வீடியோ உரையை தொலைக்காட்சிகள் நேற்றிரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பின. அதிபர் தேர்தலுக்கு இன்னமும் நான்கு மாத காலம் மட்டுமே இருக்கின்ற நிலையில் - தேர்தலில் போட்டியிடுவாரா என்பதை முறைப்படி அறிவிப்பதைத் தவிர்த்து வருகின்ற பின்னணியில் - மக்ரோனின் இன்றைய புதுவருட வாழ்த்துரை அரசியல் தரப்புகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

தொற்றின் பிடியிலும் தனிமைப்படுத்தல்களிலும் இருந்தவாறு புதுவருடத்தை வரவேற்கின்றவர்களுக்கும், கொரோனா வைரஸின் நீண்டகாலப் பாதிப்புகளுக்கு (long Covid) ஆளானவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் அவர் தனது உரையில் நினைவுகூர்ந்தார்."தொற்று நோய் காரணமாக அனைத்தையும் ஒத்திப்போட நேர்ந்தாலும் எங்கள் கூட்டான நம்பிக்கையைக் கைவிட்டுவிடக் கூடாது" - என்பதை அவர் வலியுறுத்தினார்.

எலிஸே அரண்மனைத் தோட்டத்தில் பதிவு செய்யப்பட்ட உரையில், தனது ஆட்சியின் ஐந்து ஆண்டுகால சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், தன்னை ஒரு வேட்பாளராக அறிவிப்பதை மீண்டும் தவிர்த்துக் கொண்டார்.பதவிக் காலத்தின் இறுதி நாள் வரை பணியாற்றுவேன் என்று மீண்டும் கூறிய அவர், "எனது இடம் எதுவானாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உங்களைப் பாதுகாப்பேன்"("quelle que soit ma place, je continuerai à vous servir") என்று மட்டும் குறிப்பிட்டார். மக்ரோன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்க்கக் கூடும் என்று சில அரசியல் தரப்புகளில் நிலவும் சந்தேகங்கள் இதன் மூலம் தெளிவின்றி நீடிக்கின்றன.

பிரான்ஸில் மூன்றாவது நாளாக-மிக உச்ச அளவாக-ஒரு நாள் தொற்றாளர் களது எண்ணிக்கை (232,200) இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 200 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.1,928பேர் புதிதாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
Previous Post Next Post