முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை! கணவர் வாக்குமூலம்!!


முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டார் என்று அவரது கணவர் பொலிஸில் ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார்.

பெண்ணின் தலையில் காயம் காணப்பட்டதாகவும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா அறிக்கையிட்டுள்ள நிலையில் பொலிஸாரின் விசாரணையில் பெண்ணின் கணவர் குற்றத்தை ஒத்துக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூதன்வயல் கிராமத்திலுள்ள தென்னங்காணியில் உள்ள கிணறொன்றிலிருந்து நேற்று முன்தினம்  8ஆம் திகதி சனிக்கிழமை குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

அதே இடத்தைச் சேர்ந்த யோகராசா ராஜினி (வயது–39) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே சடலமாக மீட்கப்பட்டார்.

கடந்த 4ஆம் திகதியில் இருந்து குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்த நிலையில் அவர் 4 நாள்களின் பின் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

குடும்பப் பெண் இரண்டாவது திருமணமாக ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார். சம்பவத்தையடுத்து கணவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் குடும்பப் பெண்ணின் சடலம் இன்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

பெண்ணின் தலையில் காயம் காணப்படுவதாகவும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டது.

இந்த நிலையில் பெண்ணின் கணவரிடம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்தனர். அதன்போது மனைவியை தான்தான் கிணற்றில் தள்ளிவிட்டதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி:
Previous Post Next Post