அவுஸ்திரேலிய கடலில் மூழ்கி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான சிறிபிரகாஸ் செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Geelong கடலில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுப் பலியாகியுள்ளார். அவசர சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்திருக்கிறார்கள்.
வெகுநேரம் தேடிய பின்னர், அன்று மாலையளவில் சிறிபிரகாஸின் சடலம் Geelong கடற்கரையில் தென்மேற்கு கரையிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது.
விக்டோரியாவின் மிக ஆபத்தான கடற்பகுதியாக Geelong அறிவிக்கப்பட்டுவருகிறது. தொடர்ச்சியாக மாறுகின்ற காலநிலையால் கொந்தளிப்பது மாத்திரமன்றி, இந்தக் கடலில் சுறா தாக்குதல்களும் பரவலாக இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பகுதியில் இந்தவருடம் இடம்பெற்றுள்ள ஆறாவது உயிர்ப்பலி இதுவாகும்.
நீச்சல்காரர்களுக்கு உதவியாக கரையில் பணியமர்த்தப்படுகின்றன உயிர்காக்கும் படையினரின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக உயிர்காக்கும் படைப்பிரிவின் விக்டோரிய தலைவர் தெரிவித்துள்ளார்.