கனடாவில் ஆசியர் ஒருவரை பெண் ஒருவர் பொதுவெளியில் கொரோனா தொடர்பில் திட்டிய வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அந்த செய்தியை நாடாளுமன்ற உறுப்பினரான இலங்கை தமிழர் கேரி ஆனந்தசங்கரி சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மொண்ட்ரியலில் தான் இச்சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அதன்படி பல்பொருள் அங்காடியில் சீனாவை சேர்ந்த Ken Mak என்பவர் தனது காதலியுடன் பொருட்கள் வாங்க வந்தார்.
அப்போது அங்கிருந்த பெண், Ken Mak அருகே வந்து நீங்கள் சீனரா என கேட்க அவரும் ஆம் என சொன்னார். பின்னர் திடீரென கோபமான அப்பெண் உங்களை போன்ற சீனர்களால் தான் கொரோனா தொற்று இங்கு ஏற்பட்டது என திட்டினார்.
இது தொடர்பாக மேலும் அவர் திட்டிய நிலையில் அங்கிருந்து சென்றுவிட்டார், இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில் வைரலாகியுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் அங்கு வரவழைக்கப்பட்டனர், அவர்கள் அங்கு வந்த பின்னரே அப்பெண் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இது குறித்து Ken Mak கூறுகையில், நான் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் குடியேறினேன். எனக்கு இச்சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது, ஏனெனில் கனடா அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நாடு ஆகும் என கூறியுள்ளார்.
இச்சம்பவத்திற்கு மொண்ட்ரியல் மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு இது ஏற்று கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.