கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஒமிக்ரான் மாறுபாட்டால் எதிர்வரும் நாட்களில் அல்லது வாரங்களில் சுனாமி போல புதிய பாதிப்புகள் அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, ஒண்டாரியோ அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதன்கிழமை முதல் அரசு நிதியளிக்கும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என ஒண்டாரியோ அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ஜனவரி 17 வரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. உட்புறங்களில் நடக்கும் திருமணங்கள், இறுதிச்சடங்குகள் மற்றும் மத சேவைகள், சடங்குகள் மற்றும் விழாக்களில் 50 சதவீத பேருக்கு மட்டுமே அனுமதி.
வெளிப்புறம் நடக்கும் நிகழ்வுகளில் 2 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் அளவிற்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
உட்புறத்தில் அமர்ந்து உணவருந்தும் வசதிக்கொண்ட உணவகங்கள் மற்றும் பார்கள் மூடப்படும்.
உட்புற கச்சேரி அரங்குகள், திரையரங்குகள் மற்றும் சினிமாக்கள் மூடப்படும் மற்றும் ஜிம்கள் உட்பட உட்புற விளையாட்டு, பொழுதுபோக்கு உடற்பயிற்சி மையங்களும் மூடப்படும் என ஒண்டாரியோ பிரீமியர் Doug Ford அறிவித்துள்ளார்.
வணிகங்களும் நிறுவனங்களும் முடிந்தவரை பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஒண்டாரியோ பிரீமியர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் 21 நாட்கள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.