யாழ்.நல்லூர் சட்டநாதர் வீதியில் ஆலயச் சூழலில் கொட்டப்படும் கழிவுகள்! (படங்கள்)

யாழ்ப்பாணம், நல்லூர் சட்டநாதர் பிரதான வீதியில் அமைந்துள்ள கொண்டலடி வைரவர் ஆலயச் சூழலில் இனந்தெரியாத நபர்களினால் கழிவுப் பொருள்கள் நாளாந்தம் கொட்டப்பட்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

அப் பகுதியில் நாளாந்தம் யாழ்.மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றும் பகுதிகள் உள்ள நிலையிலும் ஆலயச் சூழலைக் குறிவைத்து இவ்வாறு கழிவுப் பொருள்கள் கொட்டப்படுவது கவலையளிப்பதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெ.கிரிதரனின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, குறித்த கழிவுப் பொருள்கள் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கழிவுப் பொருள்களைக் கொட்டியவர்களை அப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கமராக்களின் மூலம் கண்டறிவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கழிவுப் பொருள்களைக் கொட்டியவர்கள் இனங்காணப்படுமிடத்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அண்மையில் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்னால் மாமிசக் கழிவுகளுடன் கூடிய மூட்டை இனந்தெரியாத நபர்களினால் போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post