அணுவாயுதத் தடுப்புப் படை ஆயத்த நிலை! புடின் உத்தரவு!!


  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டின் அணுவாயுத தடுப்புப் படைப்பிரிவை உஷார் நிலையில் வைத்திருக்குமாறு தளபதிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். தேவையற்ற அணுவாயுதப் பதற்றத்தை அவர் உருவாக்குகிறார் என்று அமெரிக்கா கண்டித்திருக்கிறது.

புடின் இன்று ஞாயிற்றுக்கிழமை அரச தொலைக்காட்சியில் பேசுகையில் ரஷ்யாவின் அணுஆயுதத் தடுப்பை இயக்கும் படைகளை (forces operating Russia's nuclear deterrent) முழு உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அவரது இந்த அறிவிப்பு உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

போரில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படும் நிலை தோன்றினால் அதிலிருந்து ரஷ்யாவைப் பாதுகாப்பதற்கே இந்த உஷார் உத்தரவு என்று ரஷ்யத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
 
உக்ரைனில் நேட்டோ படைகள் தங்கள் போராயுதங்களைத் தொடர்ந்து குவித்து வருவதற்கும் ரஷ்யாவை சர்வதேச "ஸ்விஃப்ட்" வங்கி வலையமைப்பில் இருந்து ஒதுக்க மேற்கு நாடுகள் எடுத்துள்ள முடிவுக்கும் எதிர்வினையாற்றும் நோக்குடனேயே புடின் இந்த உத்தரவை விடுத்துள்ளார் என நம்பப்படுகிறது.
 
புடினின் அறிவிப்பு வெறுமனே ஓர் அரசியல் உத்தியே அன்றி அதில் அச்சப்பட எதுவும் கிடையாது என்றும், இல்லை, அவர் தனது மனநிலையை இழந்துவருகிறார் என்பதன் அறிகுறி இது என்பதால் உலகத்தின் பாதுகாப்பு ஒரு புதிய வழமைக்குள்(new normal for our safety) வந்துள்ளது என்றும் வெவ்வேறு விதமான அவதானிப்புகளை போரியல் வல்லுநர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளி நாடாகிய பெலாரஸில் ரஷ்யா தனது அணு ஆயுதங்களை நிறுத்துவதற்கான அங்கீகாரத்தை அங்கு இன்று நடைபெறுகின்ற ஒரு கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதேசமயம் எதிர்பார்த்தது போல 72 மணி நேரப் படை நடவடிக்கைகளில் ரஷ்யாவால் உக்ரைனை நிலைகுலையச் செய்ய முடியாமற் போயிருப்பதால் அது தனது தாக்குதல் உத்திகளை மாற்றி விசாலப்படுத்தியுள்ளது. 

உக்ரைனின் இரண்டாவது பெரிய ஹார்கீவ் நகரத்தினுள் ரஷ்யப் படைகள் நுழைந்துள்ளன என்று கூறப்படுகிறது. நகரம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

இதற்கிடையில், இரு தரப்புகளும் உக்ரைன் - பெலாரஸ் எல்லை பகுதியில் சந்தித்துப் பேசுவதற்கு இணங்கி உள்ளன. பேச்சுக்களுக்குத் தயார் ஆனால் பெலாரஸ் நாட்டில் வந்து பேச நாங்கள் தயாரில்லை என்று ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் நிராகரித்திருந்தது.

அதனையடுத்தே இரு நாட்டு எல்லையோரம், ரஷ்யப் படைகளது கட்டுப்பாட்டில் இருக்கின்ற செர்னோபில் பகுதியில் சந்திப்பை நடத்த ஏற்பாடாகி வருகிறது.
Previous Post Next Post