பிரான்ஸில் தமிழர்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்திய பொண்டி நகர மேயர் அரசியலில் இருந்து ஒதுங்குகிறார்!


  • குமாரதாஸன். பாரிஸ்.
கடந்த ஒரு தசாப்த காலம் பாரிஸ் பொண்டி(Bondy) நகர சபையின் முதல்வராக விளங்கிய சோசலிஸக் கட்சியின் சில்வின் தோமஸ்ஸான்(Sylvine Thomassin) அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார்.

நகர சபைக்கு நடந்த தேர்தலில் வலது ரிப்பப்ளிக்கன்(LR) வேட்பாளர் ஸ்ரெபன் ஹெர்வ் (Stephen Hervé) அவர்களிடம் தோல்வியடைந்ததை அடுத்தே அவர் தனது இந்த முடிவை அறிவித்திருக்கிறார்.

பாரிஸ் பிராந்தியத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளில் பொண்டியும் ஒன்றாகும். Seine-Saint-Deni மாவட்டத்தின் முக்கிய நகரமாகிய பொண்டியின் நிர்வாகம் நீண்டகாலமாக சோசலிஸக் கட்சி வசம் இருந்து வந்தது. சில்வின் தோமஸ்ஸான் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2020 வரை நகரத்தின் முதல்வராக பதவியில் நீடித்துவந்தார்.

நகரசபைக்கு கடந்த மாத இறுதியில் இரண்டாவது கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டுத் தேர்தல் வாக்களிப்பில் முறைகேடுகள் நடைபெற்றன என்று சில்வின் தோமஸ்ஸான் செய்த முறைப்பாட்டை அடுத்தே அப்போதைய தேர்தல் முடிவை ரத்துச் செய்த நீதிமன்றம் புதிய தேர்தலுக்கு உத்தரவிட்டிருந்தது.

கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெற்ற இரண்டாவது வாக்களிப்பில் ரிப்பப்ளிக்கன் வேட்பாளர் ஸ்ரெபன் ஹெர்வ் 61.39%வீத வாக்குகளால் வெற்றி பெற்று புதிய முதல்வராகத் தெரிவாகியிருக்கிறார்.

அவரது நிர்வாகத்தில் தான் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கப்போவதில்லை எனக் கூறியிருக்கிறார் சில்வின் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள அவர், அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவைத் தனது 'பேஸ் புக்' பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

மிக நீண்ட காலம் சோசலிஸக் கட்சியில் இயங்கிவந்தவர் சில்வின் தோமஸ்ஸான். Seine-Saint-Deni நகர சபைகளில் முதல்வர் பதவியை வகித்த மிகச் சில பெண்களில் அவரும் ஒருவர். அத்துடன் தமிழர்களது தேசிய நிகழ்வுகளில் தவறாது பங்கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தி வந்தவர்.

பொண்டி நகரின் அரசியல் வரலாறு அதன் நீண்டகால மேயர் இன்றிப் புதிய அத்தியாயத்துக்குள் பிரவேசிப்பதாக பாரிஸ் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Previous Post Next Post