மூளாயில் நேற்று (20) இரவு நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார். இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.
இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. காரைநகர், கருங்காலியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா என்னும் 49 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள நியு கமால் மாபிள் விற்பனை நிலையத்தில் கணக்காளராகப் பணியாற்றுபவர் என்று கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவனான மூளாயைச் சேர்ந்த ஆனந்தகுமார் கஜீபன் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.
மூளாய் – மாவடி வீதியில், காளி கோயிலுக்கு அண்மையில் நடந்த விபத்தில், இருவரது மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியுள்ளன.
விபத்தில் நிந்தியானந்தராசா தலையில் காயமடைந்த நிலையில், அதிக இரத்தப் போக்குக் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று அறியமுடிகின்றது. உயிரிழந்தவரின் உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துத் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.