தெரு நாய் மற்றும் பூனையின் நகங்கள் கீறலுக்கு உள்ளாகி குடும்பத் தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
அவர் விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதுதான் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகினார் என்று சட்ட மருத்துவ வல்லுநரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் (வயது-35) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
3 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடிக்கு உள்ளாகிய குடும்பத் தலைவர் அது தொடர்பில் மருத்துவ சிகிச்சை பெறாததால் விலங்கு விசர் நோய்த் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளத் தவறியுள்ளார்.
அத்துடன், 2 மாதங்களுக்கு முன்பு பூனையும் அவருக்கு நகங்களால் கீறியுள்ளது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
பருத்தித்துறையிலுள்ள சகோதரி வீட்டில் தங்கிருந்த போது அவருக்கு நேற்றிரவு திடீரென நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேலதிக சிகிச்சைக்காக அவர் நேற்று நள்ளிரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.