ஜனாதிபதி கோத்தாபயவின் வீடு மக்களால் சுற்றிவளைப்பு! பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு!! ஊரடங்கு அமுல்!!!


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இல்லத்துக்குச் செல்லும் மீரிஹான – பெங்கிரிவத்த வீதியில் இரவு தன்னிச்சையாகத் திரண்ட மக்கள், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நாட்டின் பொருளாதார சீர்கேட்டுக்கு ஆட்சியாளர்களே காரணம் என்று தெரிவித்துமே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் – யுவதிகள் பொலிஸ் பாதுகாப்பை மீறி, ஜனாதிபதியின் வீட்டுக்குள் நுழைய முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இரவு 10 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸாரும், சிறப்பு அதிரடிப் படையினரும் தண்ணீர் தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுப் பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து அங்கு நிலைமை முற்றாக மோசமடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பொலிஸாரின் வாகனங்கள் மீதும், இராணுவத்தினரின் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்டிருந்த வீதித் தடையை உடைத்து ஜனாதிபதியின் வீட்டுக்குள் நுழைய முயன்றனர்.

பொதுமக்கள் மீது தண்ணீர் தாரைப் பிரயோகமும், கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புப் பிரிவினரால் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளார் என்று தெரிகின்றது.

அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரை ஏற்றிவந்த பஸ் ஒன்றுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர். அங்கிருந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் வாகனங்கள் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இணைய வசதிகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதுவரை அந்தப் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கூடி நின்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராகக் கோசங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

அந்தப் பகுதியை நோக்கி பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் திரண்டு வருவதால் அங்கு தொடர்ச்சியாக பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் நுகேகொட பொலிஸ் பகுதிகளில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுள்ளது.

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல ஊடகவியலாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட டசின் கணக்கான எதிர்ப்பாளர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஜெயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் காலை ஐந்து மணியுடன் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.




Previous Post Next Post